ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Form-16


அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆத்மாக்கள்
அனைவரும் அறிந்த விஷயம் இந்த Form-16.
ஒவ்வொரு வருஷமும் மார்ச் முடிந்ததும்
அலுவலகத்தில் ஒரு அய்யா கை எழுத்து
போட்டு இதை கொடுப்பார். அதில் அந்த
வருடம் முழுதும் நாம் பெற்ற சம்பளம்
பிடித்த வருமான வரி போன்ற விபரமும்
இருக்கும். இதைக் கொண்டு போய்
வருமான வரி அலுவலகத்தில் தாக்கல்
செய்ய வேண்டும். அதற்கு ஏகப்பட்ட
கெடுபிடி. வருமான வரி அலுவலகத்தில்
பிச்சைகாரனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
ரிட்டர்ன் ஃபைல் பண்னலைன்னா அபராதம்.
மிரட்டல் பத்திரிக்கைகளில் விளம்பரம்.
நிற்க.
அக்டோபர் ஒண்ணாம் தேதி எந்திரன் ரிலீஸ்.
படத்தயாரிப்புக்கான செலவுகளை கோடியில்
எழுதுகிறார்கள் எல்லா பத்திரிக்கைகளிலும்.

பி.கு : எந்திரன் இசை வெளியீட்டு விழா.
வெளியீட்டு விழாவை தயாரித்த விழா.
டிரய்லர் வெளியீட்டு விழா.
டிக்கட் முன்பதிவு.
ஜாக்கிரதை.
அடுத்த வாரம் எந்திரனில் இடைவேளை
விட்டாச்சு விழா.

திங்கள், 20 செப்டம்பர், 2010

Udaan


ஹிந்தி திரைப்படம்.
சப்-டைட்டில் தயவில் பார்த்த படம்.
மிக அற்புதம் என்று சொன்னால் மிகையாகாது.
ரோஹன்.
ஹாஸ்டல் சுவரைத் தாண்டிக் குதித்து சினிமா
பார்க்கச் செல்கிறான் நண்பர்களுடன். அங்கே வார்டன்
அவர்களைப் பார்த்து விட பள்ளியிலிருந்து
விரட்டப் படுகிறான்.
எட்டு வருடங்கள் ஹாஸ்டலில் தன்னை வந்து
பார்க்காத தந்தையிடம் வந்து சேர்கிறான்.
அர்ஜுன் இன்னொரு பெண் மூலமாக அவன்
தந்தைக்குப் பிறந்த சிறுவன். இருவரும்
தாயை இழந்தவர்கள்.
ரோஹனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பது
கனவு. கவிதைகள் எழுதுகிறான்.
அவன் அப்பா சொல்கிறார். எழுத்தாளனாக
விட மாட்டேன். பட்டினி கிடந்து சாகப் போகிறாய்.
அவன் அப்பா சர்வாதிகாரி. அவரை பையன்கள்
சார் என்றுதான் அழைக்க வேண்டும்.
ரோஹனை பொறியியல் படிக்க வைக்கிறார்.
மீதப்பட்ட நேரத்தில் தன் ஃபேக்டரியில் வேலை
பார்க்க வைக்கிறார்.
சிறுவன் அர்ஜுனை தந்தை பெல்ட்டால்
அடிக்கிறார்.
தந்தை மூன்றாவது பெண்ணை திருமணம்
செய்ய ரோஹன் அர்ஜுனை அழைத்துக் கொண்டு
கவிதைகளுடன் மும்பை செல்கிறான்.
ஜனரஞ்சக பத்திரிக்கையில் வரும்
தொடர் போன்ற சாயலில் கதை இருந்தாலும்
சிறுவர்கள் நடிப்பில் பின்னுகிறார்கள்.
உதிரிப்பூக்களை கொஞ்சம் ஞாபகப் படுத்துகிறார்கள்.
அமித் திரிவேதி இசையில் சில உச்சங்களைத்
தொடுகிறார்.
படத்தில் அனுராக் காஷ்யப்பின் பங்கும் உள்ளது.
இவர் பிளாக் ஃபிரைடே,தேவ் டி போன்ற மிகச்
சிறந்த படங்களை இயக்கியவர்.
இப்படம் 2010 கேன்ஸ் திரைப்பட விழாவில்
பங்கு பெற்றது.
விக்ரமாதித்யா இயக்கியுள்ளார்.

பி.கு : இப்படத்தை தயவு செய்து தமிழ் படத்துடன்
ஒப்பிட்டுப் பார்த்து ஆதங்கப் பட வேண்டாம்.
காலமெல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டேயிருக்க
வேண்டும்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்

மேலே உள்ள தலைப்பில் ஆ.மாதவராஜ் சார் தன்
பிளாக்கில் எழுதியுள்ளார். படிக்கும் போதே மனசுக்கு
கஷ்டமாக இருக்கிறது. பெண்கள் பொது தளத்தில்
எழுத வரும்போது ஆணகள் எப்படி
எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதற்கு மற்றொரு
உதாரணம். முந்தைய உதாரணம் மறைவதற்குள்
அடுத்தது. விதி விலக்குகளை விலக்கி விட்டு
பேசுவோம்.நவீனமயம் என்பது நம் சிந்தனையில்
வரவேண்டும். அது நாம் உபயோகிக்கும்
பொருட்களில் மட்டுமே இருக்கிறது. வினவு தளத்தில்
அந்த சகோதரி இரு ஆண் பதிவர்களால் தனக்கு
ஏற்பட்ட மன நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ளார்.
ஆண்களின் பிரச்சினைதான் என்ன?
ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.
பெண்கள் நினத்தால் ஆண்களை விட
நிறைய விஷயங்களை எழுத முடியும்.
எழுத மறுக்கிறார்கள் என்பதற்கான
காரணம் இப்போது புரிகிறது. ஆணாதிக்க
முட்பாதையைக் கடக்க வேண்டிய சூழல் இங்கு
நிலவுகிறது. எல்லா ஆண்களும் தங்களின்
சிந்தனை செல்லும் தடத்தை மாற்றிக் கொண்டால்
பெண்களின் பங்களிப்பு நமக்கு நிறைய கிடைக்கும்.

செய்வோமா?

நானும் மாதவராஜ் சாரை வழிமொழிகிறேன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இன்றைய ....

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்திருந்த வழக்கை
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஒரு
பாரட்டப்பட வேண்டிய தீர்ப்பு. இன்றைய நடுத்தர
வர்க்கம் மேட்டுக்குடி சிந்தனையைத் தத்து எடுத்துக்
கொண்டதாலேயே தன்னை மேட்டுக்குடியாக
நினைத்துக் கொண்டு தன்னளவில் ஒரு தத்துவத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வில்லாமல்
எல்லாக் குழந்தைகளும் ஒரே கல்வியைக் கற்பதா?
இந்த தத்துவத்தை கையிலெடுத்துக் கொண்ட
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றன.
இத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை வைத்துதான்
இதனை விமர்சிக்க முடியும். பொறுத்திருப்போம்.

***************************************************

இன்று காலையில் பின்பக்கம் அந்தச் சிறுவர்களைப்
பார்த்தேன். மூன்று சிறுவர்கள். அனைவரும் பத்து
வயதுக்குட்பட்டோர். ஏழ்மை உடையிலும், உருவத்திலும்.
குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தனர். படிக்க வேண்டிய
குழந்தைகள். மனசில் குற்ற உணர்ச்சியும், கோபமும்
நிரம்பி வழிந்தது. மீரா நாயரின் “ சலாம் பாம்பே “
ஞாபகம் வந்தது. எல்லாவற்றையும் சினிமாவுடன்
ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது சரிதானா?

***************************************************

9/11 என்றால் 2001 ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக்
கோபுர தாக்குதல் என்றாகிவிட்டது. அன்றிலிருந்து மிகச்
சரியாக 28 வருடங்களுக்கு முன்பு சிலியில் ஒரு
தாக்குதல் நடந்தது. அதன் விபரம் மிகச் சுருக்கமாக :

1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்று சால்வடார்
அலண்டே சிலியில் சோசலிச அரசை நிறுவினார். இரண்டே
ஆண்டுகளில் அவர் அமல்படுத்திய சோசலிச சீர்திருத்தங்களால்
நாடு வேகமாய் முன்னேறியது. ஆனால் அமெரிக்க உதவியுடன்
எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட போக்குவரத்துப் பணியாளர்
வேலை நிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. சிலியின்
ஜனாதிபதி மாளிகை சி.ஐ.ஏ.வினால் குண்டுவீசி
தகர்க்கப் பட்டது, அதிபர் சால்வடார் அலேண்டெ படுகொலை
செய்ய பட்டதும் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம்
தேதியில்தான். அமரந்தாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த
” பனியும் நெருப்பும் “ என்ற லத்தீன் அமெரிக்க சிறுகதை
தொகுதியில் இந்தச் செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.

வரலாற்றில் இரண்டு நிகழ்வுகள். முன்னது மறக்கடிக்கப்
பட்டது. பின்னது நினைக்கப் படுகிறது.
அண்ணன் அமெரிக்காவின் கைங்கர்யம்.

புதன், 8 செப்டம்பர், 2010

மிஷ்கின் எனும் படிப்பாளி



மீண்டும் ஒரு முறை “அஞ்சாதே” படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வு நீர்த்துப் போகவில்லை.
படத்தைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும்
இயக்குனர் மிஷ்கினைப் பற்றிச் சொல்ல்வே விருப்பம். முதல் படம்
சித்திரம் பேசுதடியில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்பட்டன.
இரண்டாவது படம் அதை ஆமோதித்தது.
ருஷ்ய நாவலின் கதாபாத்திரத்தின் பெயரை புனைந்து கொண்டதில்
இருந்தே இவருக்கு இலக்கியத்தின் மீதுள்ள காதல் புரிகிறது.
திரைத் துறைக்கு வருவதற்கு முன் இவர் லேண்ட்மார்க் புத்தக
விறபனை நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். புத்தகம் படிக்கும்
ஆர்வத்திற்காக மட்டுமே.
இலக்கிய பின் புலம் உள்ளவர்கள் திரைத்துறையில் நிறைய
மாற்றங்கள் செய்யலாமென்பதற்கு இவர் ஓர் அடையாளம்.
இந்த இடத்தில் ஒரு வருத்தத்துக்குரிய செய்தியையும் சொல்ல
வேண்டியுள்ளது.
இவரது மூன்றாம் படமான “நந்தலாலா” இன்னும் திரையிடப்பட
முடியவில்லை. காரணம் நாம் அனைவரும் அறிந்ததே.
நம் சூப்பர் ஸ்டார்கள் எவரும் படத்தில் இல்லை.
பஞ்ச் வசனங்கள் இல்லை. ஏகப்பட்ட இல்லைகள்.

இதே மாதிரி பார்க்க முடியாமல் போன படங்கள்:

மகேந்திரனின் ”சாசனம்”.

பிரியதர்ஷனின் ”காஞ்சிவரம்”

மகனின் கடிதத்திற்காய் காத்திருக்கும் ஒரு கிரமத்துத் தாயைப் போல்
காத்திருக்கிறேன்.