கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 நவம்பர், 2010

செவிக்குணவு



பீகாரில்
காங்கிரஸ்
காலி.
எடியூரப்பா
ஆட்டம்.
ரோசைய்யா
வீட்டுக்கு.
ராசாவுக்குப்
பின்னாடி
ராணியா?
உணவு
இடைவேளையில்
மென்று
கொண்டிருக்கிறார்கள்
தேசத்தின்
ஆரோக்கியத்தை.

புதன், 24 நவம்பர், 2010

மரணத்திற்கு முன்பான

விதிகளுக்கு
உட்பட்டு
வாழ்வதெனும்
விதியைக்
கடைபிடித்தால்
சில
விதிவிலக்குகள்
சாத்தியம்.
பழகிய பாதையில்
நடந்தால்
சேருமிடம்
உத்திரவாதம்.
பழையன
பழகினால்
காயங்கள்
தவிர்க்கலாம்.
மரணத்திற்கு
முன்பான
நொடியில்
சுழித்து
மேலெழும்பும்
கேள்விக்கு
பதிலற்று
மரித்துப்
போகலாம்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள

விளையாட்டுக்களால்
கரை புரண்டு
ஓட வேண்டிய
குழந்தைகளின்
மாலைப் பொழுதுகள்
வீட்டுப் பாடங்களால்
தேங்கி நாறுகின்றன.

******************

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

*****************

அவிழ்த்து
வைத்த
ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
மனசுக்குள்.

*****************

செவ்வாய், 27 ஜூலை, 2010

அலுவலகத்தில் அம்மா



ஒவ்வொரு
தொலைபேசி
அழைப்பிற்கும்
சுரக்கின்றன
மார்புகள்.

*******************

பள்ளிக்கு
அனுப்பிய
குழந்தையின்
ஞாபகத்தில்
சோறிடுகிறாள்
அலுவலக
ஜன்னலில்
துள்ளி
விளையாடும்
அணிலுக்கு.

******************

ஞாயிறு
வரை
பொறுத்திரு
கண்ணே.
முத்த மழை
பொழிந்து
கொள்ளலாம்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒன்று , இரண்டு , மூன்று


குல்மொஹர்
உதிர்க்கும்
தீத்துளிகளில்
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
தகிக்கும்
என் காதல்.


வேட்டையாடிய
மிருகத்தின்
பக்கத்தில்
நின்று
புகைப்படம்
எடுத்துக்
கொள்பவனை
நினைவூட்டுகிறாய்
என்று
சொல்லிப் போனான்
வென்ற காதலை
மணமுடித்த
அன்று.



சுவரிலிட்ட
குழந்தையின்
கிறுக்கல்களில்
தேடினால்
கிடைக்கக் கூடும்
கடவுளின்
கையொப்பம்.

சனி, 3 ஜூலை, 2010

காத்திருப்பு



நிலவு
பின்தொடர்வதாய்ச்
சொல்லி
கைகளை
இறுகப் பற்றி
இழுத்துப் போகும்
என் மகளின்
முதல் கவிதைக்காய்
காத்திருக்கின்றன
நான்
எழுதிய கவிதைகள்
அனைத்தும்.

வெள்ளி, 25 ஜூன், 2010

கனவும் , கனவும்

இரவு
தன்
சிறகுகளை
மடித்துக்
கொண்டிருந்த
விடியலில்
கனவு காண்பதாக
கனவொன்று
கண்டேன்.
கனவில்
வந்த
நான்
கனவு
கண்ட
என்னைப்
போலில்லை
என்ற
பதட்டத்தில்
கனவு
உதறி
துயில்
கலைந்தேன்.

திங்கள், 21 ஜூன், 2010

மேலும் சில

வெள்ளமெனப்
பெருகும்
குறுஞ்
செய்திகளில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
நீ
சொல்லாமல்
விட்ட
ஒரு
செய்தியை.

*************************

கைமறதியாய்
வைத்த
மூக்குக்
கண்ணாடியைத்
தேடும்
முதியவரைப்
போல்
உள்ளுக்குள்
அலைகிறது
ஒரு
கவிதை.

************************

பாலத்தினடியில்
தவித்து
நிற்கும்
நதியின்
விசும்பலில்
உறைகிறது
ஒரு
வரலாற்றுத்
துக்கம்.

************************

சாணை
தீட்டி
தீட்டி
நீ
பிரயோகித்த
வார்த்தைதகளால்
தாக்குண்டு
வீழ்கிறது
நமக்கான
சம்பாஷணை.

வியாழன், 17 ஜூன், 2010

கொஞ்சம் கவிதைகள்

வனம் புகும்
ஆசைக்கான
திரி தூண்டல்
ஓர் ஓக் மரத்தின்
காற்றுக்கான
எதிர்வினையின்
போது
நிகழ்ந்திருக்கலாம்.

*********************

பூனை
தடம் பதிக்கும்
மெல்லொலி
கேட்டு
கண்
விழிக்கிறதென் கனவு.

**********************

தயவு செய்து
நிறுத்துங்கள்
நிரம்பி
வழிகிறதென்
கோப்பை.

ஞாயிறு, 13 ஜூன், 2010

எசப்பாட்டு

படுகொலை
செய்யப்பட்ட
மரங்களின்
சமாதிகளின்
மீதேறி
புகை கக்கி
விரையும்
நம்மையும்
மன்னிக்கிறது
இயற்கையின்
பெருங்கருணை.

நதியெனப்படுவது
குடிக்க
குளிக்க
பயிர் செழிக்க
என்பது மருவி
கழிவுநீர்
கலக்க
என்பதாய்..

கடலிலிருந்து
மீனவனை
விரட்ட
ஒரு திட்டம்.
மலையிலிருந்து
பழங்குடியினனை
விரட்ட
ஒரு திட்டம்.
அரசு
ஐந்தாண்டு
திட்டமிடட்டும்.
நாம்
மாறுதலுக்கு
அம்பானியை
பிரதமராகவும்
டாட்டாவை
ஜனாதிபதியாகவும்
ஆக்கி
அழகுபார்க்க
திட்டமிடுவோம்
அரசு சார்பில்.

சிகப்பு
வெள்ளை
பச்சை
கருப்பு
மஞ்சள்
காவி
நீலம்
கட்சிக்
கொடிகள்
தீற்றிக்
கொண்டபின்
எல்லா
வர்ணங்களும்
ஒன்றுதானோ?

ஞாயிறு, 30 மே, 2010

வர்ண பேதம்

தவறுவதில்லை.
ஏழுமலையானுக்கு
லட்டு.
பழனியாண்டவனுக்கு
பஞ்சாமிர்தம்.
குழலூதுபவனுக்கு
வெண்ணெய்யும்,சீடையும்.
ஆற்றங்கரை நேசனுக்கு
கொலுக்கட்டை.
கருவேலமரக்
காட்டில்
மீசை முறுக்கி
அரிவாள்
தூக்கினவருக்கு
கண்ணில்
காட்டவேயில்லை
கள் கலயம்
கொஞ்சம்
சுருட்டுகள்
நீர் தெளிக்க
தலை
சிலுப்பும்
ஒரு கிடா.

ஒரு கப் zen

வாள் வித்தை
பயில
வந்தவரிடம்
தேநீர்
ஆற்றச்
சொன்னதாய்
ஒரு Zen.

கிழிபடாமல்
நீளமாய்
தேநீர்
ஆற்றும்
கடைகாரருக்கு
அந்த zen
குறித்த
அபிப்ராயம்
யாதாயிருக்கும்
என்ற
சிந்தனையோடு
ஆரம்பமாகிறதென்
நாள்.

மற்றுமொரு செய்தி


குழல்
பறக்க
மின்மினிகளை
துரத்திக் கொண்டு
ஓடுபவளின்
உள்ளங்கை
வெதுவெதுப்பில்
பதுங்கிகொள்ள
நட்சத்திரங்கள்
விருப்பம்
தெரிவித்திருப்பதாய்
செய்தியொன்று
வந்தது
நேற்றைய
கனவில்.

திங்கள், 24 மே, 2010

சேர்ந்திசை


எவரோ
எழுதிய
இசைக்
குறியீடுகளுக்கு
உயிர்
கொடுக்கும்
இசை நடத்துனரின்
கையிலிருக்கும்
மந்திரக்கோல்
போல்
இடவலமாய்
அசைந்து
கொண்டிருக்கிறது
மூங்கில் மரங்கள்.

மறதி


எதிர்
ஜன்னலில்
விரையும்
முகங்களைப்
போல்
ஞாபக
விளிம்பிலிருந்து
நழுவுகின்றன
நேற்றைய
கனவில்
கேட்ட
இசையின்
வடிவங்கள்.

புதன், 19 மே, 2010

துயருறும் இசை


விரல்களின்
ஸ்பர்சம்
மறந்து
தூசிபடர்ந்த
பியானோவின்
மெளன
விசும்பல்
கேட்டு
வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
காலடிதடத்தைப்
பற்றிக்கொண்டு
மேலெழும்புகிறது
மெலிதான
சங்கீதம்.

மின் மினிகள்


அறை
நிரம்பி
வழிகிறது
பரிசு
பொருட்களால்.
ஐந்து
புகைப்பட சட்டங்கள்.
நான்கு
சுவர்க்கடிகாரங்கள்.
மூன்று
தேநீர்க்கோப்பை
தொகுதிகள்.
இரண்டு
இரவு விளக்குகள்.
ஒரு
குடிநீர் வடிகட்டி.
இன்ன பிற
பொருட்குவியலின்
நடுவே
காணக்
கிடைக்கவில்லை
குழந்தையின்
புன்னகையையொத்த
ஒரு புத்தகம்.

உனக்கும் அமிழ்தென்று பெயரா ?


நீ
உன் பெயரை
சொல்லியிருக்கலாம்.
அதன்
காலடித்தடம்
என் மனசுக்குள்
பதியாமல் கூட
போயிருக்கலாம்.
சொல்லாததால்
ஆங்கில
திரைப்படத்தின்
இறுதியில்
திரையில்
ஓடும்
பெயர்களைப் போல்
ஓடுகின்றன
மனசுக்குள்
உனை
அழைப்பதற்கான
பெயர்கள்.

வளர்ப்பு


சங்கிலியில்
பிணைத்து
ஆட்களை
இழுத்துக்கொண்டு
ஓடும்
உயர் ஜாதி நாய்களை
வளர்த்ததில்லை.
அடுப்பில்
கொதிக்கும்
மீன் வாசத்துக்காய்
கால்களை
சுற்றிவரும்
பூனைகளை
வளர்த்ததில்லை.
சமுத்திரக்
கனவுகளுடன்
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கும்
தங்க மீன்களை
வளர்த்ததில்லை.
ஆகாயம் நோக்கி
வீசியெறிந்தும்
வட்டமிட்டு
கீழிறிங்கி
தோளில் அமரும்
புறாக்களை
வளர்த்ததில்லை.
இழந்த ஆகாயத்தை
கூண்டுக்குள் தேடி
பரிதவிக்கும்
காதற்கிளிகளை
வளர்த்ததில்லை.
எனினும்
வளர்கிறது
ஒரு மிருகம்
மனசுக்குள்.

திங்கள், 17 மே, 2010

காதல் கொடி ஏற்றி


நீருள்
மூழ்க
மறுக்கும்
பலூன்
போல்
திமிறிக்
கொண்டு
கிளம்புகின்றன
நம்
காதல்
ஞாபகங்கள்
நம்
மகளின்
திருமணநிகழ்ச்சி
நிரல்களில்
ஒன்றாய்.