சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

சிறந்த சிறுகதைகள்



அறம்.
சோற்றுக்கணக்கு.

சமீபத்தில் படித்ததில்
என்னை மிகவும்
நெகிழவைத்த
சிறுகதைகள்.

ஜெயமோகன் அவரது
இணைய தளத்தில்
எழுதிய கதைகள்.

நல்ல கதைகளைத்
தேடிப் பிடித்து
வாசிப்பவர்கள்
அனைவரும்
படிக்க வேண்டியவை.

http://www.jeyamohan.in

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பிரிய ரெஜி டீச்சர்

ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது

சனி, 24 ஏப்ரல், 2010

விடுமுறை விண்ணப்பம்


அனுப்புநர்
இரா.தனலெட்சுமி
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

பெறுநர்
உயர்திரு ஆசிரியர் அவர்கள்
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : விடுமுறை வேண்டி
*********
கடந்த திங்கள் இரவு என்னுடைய அக்கா அபி என்கிற அபிதகுசலாம்பாள்
உடம்பில் தீ வைத்துக்கொண்டு இறந்து போனாள். குளியலறை
சுவர்களில் இன்னும் அக்காவின் மிச்சமிருக்கிறது. அம்மா மயக்க நிலை
நீங்காமல் கிடக்கிறாள். அப்பா கோபம் துறந்து கதறிக் கொண்டிருக்கிறார்.
தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அக்காவின் குழந்தை.
எப்போதும் அக்காவின் விரல் நுனி பற்றிக்கொண்டேத் திரிவான்.
அம்மாச்சி அடிக்கடி சொல்லும். அடியே இவளே நீ கல்யாணம் கட்டிட்டுப்
போறப்ப இந்தக் கொடுக்கையும் கல்யாணச் சீராய் அழச்சிட்டுப் போய்டு.
அக்கா எங்கே என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவனுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல் எல்லாரும் அழுதுகொண்டிருக்கிறோம்.

சார், எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவரை அக்கா நேசித்திருக்கிறாள்.
அக்கா அம்மாவிடம் சொல்லிருக்கு. அம்மா அப்பாவிடம் சொல்ல
அப்பா அக்காவை அடித்துவிட்டார். அக்கா அப்பாச் செல்லம். அக்கா
பிறந்த பிறகுதான் அப்பாவின் பிசினெஸ் சூடு பிடித்ததாம். அப்பா எங்க
ஊரில் சின்னதா ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். அங்கே சாப்பிட
வந்தபோதுதான் அக்கா நேசித்தவருடன் அப்பாவுக்கு முதல் பழக்கம்.
அவர் எங்களூர் பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த வாத்தியார். அவர்
எல்லோருடனும் சிரித்து சிரித்துப் பழகுவார். அந்த்ச் சிரிப்புதான்
அக்காவை வசீகரித்திருக்க வேண்டும். சார், பெரிய மனுஷி மாதிரி
எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம். எனக்கும் பதினைஞ்சு
வயசு ஆய்டுச்சு.

எங்க அத்தைப் பையனைத்தான் அக்காவுக்குக் கட்டுறதாப் பேச்சு.
அதான் அப்பா ஒத்துக்கலை. எங்க அத்தைப் பையன் கூட வந்துப்
பாத்துட்டு அழுதார். அப்பாவைத் திட்டினார். என்கிட்டே சொல்லிருந்தா
நானே அபிக்கு அந்த ஆளைக் கல்யாணம் பண்ணி வெச்சிருந்த்ருப்பேன்னு
புலம்பிக்கிட்டே இருந்தார். எங்க அத்தான் எவ்வளோ நல்ல மனுஷன்
பாருங்க. அக்கா அத்தானுக்கும் இல்லாமே வாத்தியாருக்கும் இல்லாமே
போய்ச்சேர்ந்துட்டா.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
இது உங்களுக்குத் தெரியாதா சார். எங்க அக்காவை இப்படி அநியாயமாய்க்
கொன்னுட்டீங்களே சார். அக்கா லெட்டர் எழுதி வச்சிருகுது சார்.
உங்களை ஒன்னும் பண்ணிடக் கூடாதென்று. அதனால் தான் நீங்கள்
இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிறீர்கள் சார். தயவு செய்து வேற ஊருக்கு
மாற்றல் வாங்கிட்டுப் போய்டுங்க. அங்கே போய் இதே மாதிரி எதுவும்
பண்ணிடாதீங்க.

அக்கா வச்ச மருதாணிச் செடியும்,செம்பருத்திச் செடியும்
காஞ்சிப் போய்டுச்சி எங்கக் குடும்பம் மாதிரியே.இந்த்ச் சூழலில்
என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை. எனவே எனக்கு
பத்து நாட்கள் விடுப்புத் தருமாறு தங்களை மிகப்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,

இரா.தனலெட்சுமி.

புதன், 21 ஏப்ரல், 2010

பின் தொடரும் நிஜத்தின் குரல்




யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

எந்த ப அ வெ பி பெருமாள்?

உனக்கு எத்தனை ப அ வெ பி பெருமாளைத் தெரியும்?

ஒரே ஒரு ஆள்.

அந்த ஆள் நாந்தான்னு வச்சுக்க.

சான்ஸே இல்லை.

அத விடு. நீ செய்யறது நல்லா இருக்கா?

என்ன?

உன் தொழில்?

அதுக்கென்ன?

அடப் பாவி. உயிருடன் விளையாடலாமா?

விதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக எவருக்கும்

மரணம் சாத்யமில்லை.

சாத்தான் வேதம் ஓதுகிறதா?

இல்லை. என் தொழிலை நான் செய்கிறேன்.

போலி மருந்து விற்பனை. இது ஒரு தொழிலா?

இங்கே அசல், போலி என்று எதுவுமில்லை.

மீண்டும் தத்துவமா?

அப்படித்தான் வைத்துக்கொள்.

நான் சொல்கிறேன். இப்போதாவது நிறுத்து.

முடியாது. நான் ரொம்ப தூரம் வந்து விட்டேன்.

சினிமா வசனம்.

ஆனால் உண்மை.

இதன் பின் விளைவுகளை யோசித்தாயா?

இது ஒரு தொடர் விளைவு. இதன் ஆரம்பத்தில்
உங்கள் அரசியல்வாதி பின் மருத்துவர்கள்
தொடர்ந்து மருத்துவமனைகள். நீண்டுகொண்டே
போகும்.உங்கள் உணவு,நீர்,காற்று. எல்லாமே
போலி அல்லது கலப்படம்தானே?

நியாயப்படுத்த முயற்சிக்காதே?

நியாயம் அல்லது அநியாயம் இவை ரெண்டுமே
Two sides of the coin.

உன் பெற்றோர்,உன் குழந்தைகள் இவர்களுக்கு
உன் மருந்து போய் சேர்ந்தால் என்னவாகும்?

சான்ஸே இல்லை. குப்பைத்தொட்டியில்
வீசியெறியப்பட்ட அநாதை நான். எனக்கு என்று
எவருமில்லை.

இதை இதைத்தான் நான் சொல்கிறேன். நீயே
ஒரு போலி. கலப்படம். அதனால் தான்
இத்தொழிலை தேர்ந்தெடுத்துள்ளாய்.

இல்லை.இல்லை.அப்படிச் சொல்லாதே.

அப்படித்தான் சொல்வேன்.

யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்னாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

தெரியலை.

இன்னும் தெரியலையா?

ம்ஹூம்.

நீதான் நான். நான் தான் நீ.

அய்யோ. தலை சுத்துதே.

சுத்தட்டும்.

சொல். யார் நீ?

உன் மனச்சாட்சி.

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள் கனமான
பூ ஜாடியை தூக்கி தன் முன் இருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியை
நோக்கி எறிந்தான்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றில் அலையும் சிறகு



புது டெல்லி,
13.04.2010.




ப்ரிய குண்டூஸ்,
ஞாபகமிருக்கிறதா?
நாம் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட நாளை.
ஸ்டீபன் சார் தான் என்னை உனக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் பார்வையிலேயே உன்னை
எனக்குப் பிடிக்கவில்லை.
அலுவலகத்தில் உள்ள எல்லாப்
பெண்களும் உன்னிடம் பேசுவதற்கு
ஆசைப்படுவார்கள்.
நானோ அதற்கு எதிர்.
தினமும் காலை எழுந்ததும்
உன் ஜோக்குக்குச் சிரிக்கக்
கூடாதென மனசுக்குக்
கட்டளையிடுவேன்.
அன்று ஒரு நாள்.
யாரோ சொன்ன செய்தி
என்னைப் புன்னகைக்க வைத்தது.
அப்போது அருகில் இருந்தாய்.
நீ சொன்னது இன்னமும்
என் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
“ ஒரு வாரம் லீவு வேணும்.
இவங்க சிரிச்சா திருப்பதில
மொட்டைப் போடுவதா
ஒரு வேண்டுதல் ”.
அவ்வளவு நாள் அடக்கி வச்சிருந்த
சிரிப்பையும் கொட்டினேன்.
நம் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப்
பத்திரிக்கை நடத்தினோமே.
அதில் ஒரு கவிதை எழுதியிருந்தாய்.

காதலைச் சொல்லும் வழி
வைரமென வைர வியாபாரிகள்
சொல்கிறார்கள்.
என் வைரத்திடம் எப்படி
வைரத்தால் சொல்வது?

யார் அந்த வைரமெனக் கேட்டேன்.
தயங்காமல் சொன்னாய்.
நான்தான் என்று.
அதன் பின் நடந்தவை எல்லாம்
கனவு போல்.
நம் திருமணத்திற்கு என் அப்பாதான்
கொஞ்சம் சங்கடம் கொடுத்தார்.
அவரையும் நீ வசீகரித்தாய்.
நம் இந்துக் குட்டிப் பிறந்த போது
என் விரல் பற்றி அழுதாயே?
அப்புறம் சூர்யாப் பயல்
பிறந்தபோது சிரித்தாய்.
எத்தனை வருஷங்கள் ஆகிப் போயின.
நம் இந்து இப்போது ஜெர்மனியில்.
சூர்யா கனடாவில்.
இருவரையும் பார்த்து
நீண்ட நாளாகி விட்டது.
உன்னிடம் எத்தனை முறைச்
சொல்லியிருக்கிறேன்.
நீ தனியாகச் சாகக்கூடாதென.
என் சொல்லை நீ கேட்கவேயில்லை.
உன் மரணத்திற்குப் பின்
இந்த முதியோர் இல்லத்தில்
தனிமைத் துயரில்
கருகிக் கொண்டிருக்கிறேன்.
ப்ளீஸ்டா.
என்னைக் காப்பாற்று.

மாறாக் காதலுடன்,
உன் ஒல்லிப்பிச்சி.

வெள்ளி, 19 மார்ச், 2010

தாய் மண்ணே வணக்கம்



யாழினி
இல்ல.. வியாஸ்..வேத வியாஸ்
யாழினி
வியாஸ்
சரி.யாழினியும் வியாஸூம்
தாங்காதுப்பா. நாலு நாள்ல டெலிவரி.போகத்தான் வேணுமா
ஜஸ்ட். ரெண்டே நாள். வந்துடுவேன்
அவன் தோள் தொடப்பட்டது
தாடிக்காரன்
ஹலோ கேப்டன் ..எங்க தேசம் தொட்டாச்சு
தெரியும். ஏன் இப்படி செஞ்சீங்க
உங்க ஆள் 140 பேர். எங்க ஆள் 5 பேர்.வியாபாரம் balanced ஆ இல்லே
140 பேரும் விமானப் பயணிகள். ஆனா உங்க 5 பேர்
வாக்குக் கொடுத்தமாதிரி பயணிகளை இறக்கிவிட்டோம்ல.அந்த 5
பேரும் செயல் வீரர்கள்
அடுத்தவர் தேசத்தில் குண்டு வைப்பது வீரமா
பிரச்சினை
பேசித்தீர்க்கலாமே
எத்தனை வருஷமா
நாங்கள் உங்களை விட பலசாலிகள்
உங்கள் விமான நிலைய அதிகாரிகள் மூன்று பேருக்கு
லஞ்சம். எவ்வளவு தெரியுமா? இது உங்கள் பலவீனம்
சரி. அடுத்து என்ன
நாங்கள் இறங்கியதும் உன்னை அனுப்பிடுவோம்
வெளியே ஆரவாரக் கூச்சல்
என்ன
அதோ அந்த உயரமானக் கட்டிடத்தைப் பார்
ம்
எங்கள் தலைமைச் செயலகம். அதிபர்,முக்யமந்திரிகள்,
செயல் வீரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கணத்தில் கேப்டன் துருவன் முடிவு செய்தான்.
விமானம் தாழ்ந்து மிக வேகமெடுத்தது.
ஏய்.. என்ன செய்றே
நாற்பதாவது நொடியில் விமானம்
பலத்தச் சப்தத்துடன் அந்தக் கட்டிடத்தைத் தீண்டியது.