வெள்ளி, 29 அக்டோபர், 2010

அறிக்கை


அருத்தி ராயின் அறிக்கை :
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்

பி.கு: இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்
மொழிபெயர்க்கப் பட்ட அறிக்கை.

புதன், 27 அக்டோபர், 2010

துளிகள்



எந்திரன் பார்த்தாச்சு..ஷ்.. அப்பாடா... என் பையன்
பார்க்கிற வீடியோ கேம்ஸ் எவ்வளவோ தேவலை.
ஒரே ஆறுதல் இடைவேளை வரை புன்னகைக்க
வைக்கிற சுஜாதாவின் வசனம்.




ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியர்களை உதைக்கிறார்கள்.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியர்களை உதைத்திருக்கிறோம்.



தேனீக்களை வளர்க்கும் பெட்டியில் வெல்லப் பாகுடன்
தேனீக்கள் இறந்து போகாமல் இருக்க நான்கு வகை
ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கலக்கிறார்கள். இந்த
மருந்து கலக்கப் பட்ட வெல்லப் பாகினை தான்
தேனாக நாம் பருகிக் கொண்டிருக்கிறோம். மருத்துவம்
சொல்கிறது அதிக ஆன்ட்டி பயாட்டிக் உடலுக்கு விஷம்.
இனிக்கும் விஷம்.



மணிப்பூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மனித உரிமையாளர்
பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அரசு கட்டாயப் படுத்தி நாசி வழி திரவ உணவு கொடுத்து
வருகிறது. ஷர்மிளாவின் உடல் நலிந்து கொண்டே
இருக்கிறது. ஆயுதப் படைக்கு இருக்கின்ற சிறப்பு
உரிமைகளை தடை செய்யச் சொல்லி போராடிக்
கொண்டிருக்கிறார்.சிறப்பு உரிமை என்பது எந்த நேரத்திலும்
ஆண்களை சித்திரவதை செய்து கொல்லவும், பெண்களை
வன்புணர்ந்து கொல்லவும் உபயோகிக்கப் படுவது. இதே
காரணத்திற்காக முன்பு பெண்கள் நிர்வாண போராட்டம்
நடத்தியது ஞாபகத்திலிருக்கக்கூடும்.



லியூசியாபோவுக்கு இந்த வருட அமைதிக்கான
நோபல் விருது . சீன அரசு இவருக்கு
பதினோரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
காரணம் இவர் ஒரு மனித உரிமைப் போராளி.
தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற மனித
படுகொலையை எதிர்த்து எழுத ஆரம்பித்தவர்.
இவர் உரிமைச் சாசனம் ஒன்றை தயாரித்து
வெளியிட்டுள்ளார். இந்த உரிமைச் சாசனம் 08
என்பது 350 மேற்பட்ட சீன அறிஞர்களால் முதலில்
கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம்
ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு,
மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித
உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது
மிகச் சரியாக பதினோரு வருடங்களுக்கு முன்
ஆங் ஸாங் சூ கி என்ற பர்மிய அரசியல் போராளிக்கு
நோபல் அமைதி பரிசு கிடைத்தது. இவரும் இன்னமும்
சிறையில் தானிருக்கிறார். இந்த நேரத்தில்
காந்திக்கு நோபல் மறுக்கப் பட்டது குறித்து
நோபல் கமிட்டி சொல்லி வரும் சால்ஜாப்புகள்
ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

திங்கள், 4 அக்டோபர், 2010

துளிகள்

அயோத்தி வழக்கு பற்றிய லக்னோ உயர் நீதிமன்ற தீர்ப்பு
குறித்து ஊடகங்களும், இந்து அமைப்புகளும் தங்கள்
திருப்தியினை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ரொமிலா தாப்பர் ஒரு விமர்சனம்
வைத்துள்ளார்.
இது ஒரு அரசியல் தீர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசே எடுத்திருக்கக்
கூடிய ஒரு முடிவை இது பிரதிபலிக்கிறது.
இந்தத் தீர்ப்பு மத அடையாளங்களை உள்ளடக்கிய
தற்கால அரசியலின் சிக்கலையும்பிரதிபலிக்கிறது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட
ஒரு மசூதி ஒரு கும்பலினால் திட்டமிடு இடித்து
நொறுக்கப் பட்டது. ஒரு அரசியல் தலைமையினால்
இது ஊக்குவிக்கப் பட்டது. திட்டமிட்டு செய்யப்பட்ட
இந்த அழிவுச் செயலைக் குறித்து நீதிமன்றம்
எதுவும் கூறவில்லை. ஊகித்துக் கருதப்படும்
கோவில் தகர்க்கப் பட்டது கண்டனம் செய்யப்
பட்டுள்ளது.
ரொமிலா தாப்பர் பழங்கால இந்தியா பற்றிய
ஒரு புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்.

**********************************************

எந்திரன் குறித்த விமர்சனத்தை விட எந்திரனின்
அரசியல் படு சுவாரஸ்யம்.
எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் நீங்கலாக மற்ற
அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் ரிலீஸ்.
ஒரு டிக்கெட் ரூ.300.
இதுதான் முதலாளித்துவ பொதுவுடமை
சித்தாந்தமோ?

*********************************************

ரஜினி வீட்டு விசேஷத்தில் பாடிய அருணாசாய்ராம்
ரஜினியின் பாராட்டுக் கேட்டு பரவசமானார் என
பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்துள்ளது.
அருணாவின் ’என்ன கவி பாடினாலும்’
’மாடு மேய்க்கும் கண்ணே’ இன்ன பிறவற்றிலும்
மோகித்துக் கிடக்கும் எனக்கு இந்த செய்தி
ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
மேதைகளும் மனிதர்கள் தான்.