புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூன், 2011

Rich Dad Poor Dad


மனித வாழ்வில்
பணம் மட்டும்
போதும்.

பணமே
தேவையில்லை.

மேலே சொல்லப்
பட்ட ரெண்டு
வெவ்வேறு
சித்தாந்தங்களைப்
பின்பற்றுபவர்களுக்கு
இந்தப் புத்தகம்
தேவையில்லை.

உடல் நலம்
மனநலம்
குறித்த
கையேடுகள் போல்
பணநலம்
குறித்த கையேடு
இது.

ஒவ்வொரு
பெற்றோர்களூம்
தங்கள்
குழந்தைகளுக்கு
அறிமுகப்
படுத்த வேண்டிய
புத்தகங்களில்
இதுவும்
ஒன்றெனக்
கொள்ளலாம்.

Go to school,get good
grades,and look for a
safe,secure job.

இன்ன பிற
நடுத்தர வர்க்கச்
சிந்தனைகளைத்
தகர்க்கும்
வல்லமை
கொண்ட
புத்தகம்.

By

Robert T.Kiyosaki

with

Sharon L. Lechter.C.P.A.

சனி, 29 ஜனவரி, 2011

புத்தகத் திருவிழா !



தஞ்சையில் BAPASI நடத்தும் புத்தகத்
திருவிழா. சந்தோஷமாய் உள்ளே
நுழைந்தேன்.
மிளகாய் பஜ்ஜி
ஸ்டிக்கர் பொட்டு
இன்ஜினியரிங் காலேஜ்
இரு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
டைல்ஸ்
ஸ்போர்ட்ஸ் குட்ஸ்
அப்புறம்
புத்தகம்.
வெறுப்பைக் கிளப்பிட்டாங்க.
கேட்காமலே காரணம்
தெரிந்தது.
நம்ப ஊர்ல புத்தகம்
வாங்க ஆள் ஏது?
ஆன்மிகம்
வாஸ்து
சுய முன்னேற்றம்
ஆங்கில இலக்கணம்
ரமணி சந்திரன்
இந்திரா செளந்தர்ராஜன்
பாலகுமாரன்
சுஜாதா
இவைகளே
ஆக்ரமித்திருந்திருந்தன.
உயிர்மை பதிப்பகம்
ஸ்டால் போடவில்லை.
நிறைய புத்தகம் வாங்க
திட்டம் போட்டிருந்தேன்.
ஏமாற்றம்..ஏமாற்றம்.
வாங்கியது சொற்பமே.

புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்
பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
அருந்ததிராய் கரண்தாப்பர் விவாதம்
CRIME AND PUNISHMENT - FYODOR DOSTOEVSKY
THE WHITE TIGER - ARAVIND ADIGA
LADY CHATTERLEY'S LOVER - D.H.LAWRENCE

இவை வாங்கியது போக பட்ஜெட்டில்
மீதமுள்ளது.
உண்மையான புத்தகத் திருவிழாவை
எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானல் வரி



கலைவாணி என்ற தமிழ்நதி,அநேக
ஈழத்தமிழர்களைப் போல் போரினால்
கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.
கனடாவில் வாழ்ந்த காலத்தில்
கலைவாணி இராஜகுமாரன் என்ற
பெயரில் சிறுகவிதைகள்,கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய
தளங்களில் இயங்கியவர்.
இவரின் “கானல் வரி “
மரபை மீறிய காதலின் இனிப்பையும்,
கசப்பையும் சொல்லும் பெருங்கதை
அல்லது குறு நாவல்.
இந்த “மரபை மீறிய” என்ற சொற்றொடர்
பழக்க தோஷத்தில் வந்து விழுந்து
விடுகிறது.
மாதவி என்பவர் மெளலி என்பவருக்கு
எழுதிய 60 பக்கக் கடிதமே கதை.
சமுதாயத்தால் அங்கீகரிக்கப் படாத
காதலைப் பற்றி எழுதுகிறார்.
சமுதாயத்தின் அங்கீகாரத்தை
எதிர்பார்க்காமல் எத்தனையோ
செயல்கள் தன்னிச்சையாக
நிகழ்ந்து விடுகின்றன.
அதில் இவர்களின் காதலும் ஒன்று.
இவர்களின் கதையில்
பாண்டிச்சேரி ஒரு கதாபாத்திரமாகவே
வருகிறது பாண்டிச்சேரிக்கே உரிய
அத்தனை மேன்மைகளுடனும்.
தமிழ்நதியின் எழுத்து கவிதையை
சிந்திக் கொண்டே போகிறது
செல்லும் தடமெல்லாம்.
“.... எழுத்தும்,முயக்கமும்
ஒன்றுதான். இரண்டின் முடிவிலும்
கண்சொருகும் கிறக்கமே எஞ்சுகிறது.
அமானுஷ்ய வெளியில் புகையினைப்
போல் எடையற்று மிதந்த
பரவசத்தை எத்தனை தடவை நீ
சொல்லக் கேட்டிருந்தேன்.
உடல் என்பது அற்புதங்களின்
பேழை. அதைப் பொருத்தும்
திறவுகோலால் திறக்க முடியவில்லை
எனில் இந்த வாழ்வு முற்றிலும் பாழ்.
மலையுச்சியில் மனிதக் கால்கள்
இலகுவில் சென்றடைய முடியாத
உயரத்தில் பாழடைந்து கிடந்த
கோவிலைக் கண்டுபிடித்து கண்ணீர்
வழியப் பூசிப்பது போல, நான்
தொலைத்த என்னுடலை மீண்டும்
கண்டுபிடித்துக் கொடுத்தவன்
நீதான்....”
இதனையே பிரபஞ்சன் தன் முன்னுரையில்
குறிப்பிடுகிறர்.
இணையம்,இலக்கியம் வழி சென்று
காதலாகி காமத்தினூடே
பிரிதலின் வலியை மிக
அழுத்தமாகவேச் சொல்லும்
படைப்பு இது.
வாழ்வு கை விடும்போது மரணம்
எத்தனை அழகானதாகிவிடுகிறது
என்பதனை நான் கண்டேன். மரணத்தின்
மஞ்சள் பூக்கள் தலயசைத்து என்னைக்
கூப்பிட்டன. தானாகச் சாவு வந்து
என்னைச் சேரும் வரை வாழ்ந்தே
கடக்க வேண்டிய நாட்களின் நீளம்
மூச்சு முட்டியது.
மிக வலிமையான வரிகள்.
கானல் வரி பற்றிச் சொல்ல
நிறைய விஷயங்கள் உண்டு.

இது ஒரு உயிர்மை வெளியீடு.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு திரைக்கதையாசிரியனைக் குறித்து



லோகி (நினைவுகள்- மதிப்பீடுகள்)

மலையாளத் திரையுலகத்தின் மிக வசீகரமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான
லோகி என்கிற ஏ.கே.லோகிததாஸ் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளார்.
படிக்கும் போதெ மலயாளத் திரையுலகம் குறித்து பொறாமை எழுவதைத் தடுக்க
முடியவில்லை.கதை,திரைக்கதையாசிரியருக்கு இயக்குனருக்கு நிகரான அந்தஸ்து.
தனியாவர்த்தனம்,கிரீடம்,ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா,பரதம்,அமரம்,
தூவல் கொட்டரம் எனச் சொல்லிக் கொண்டெ போகலாம். அத்தனைக்கும் கதை,
திரைக் கதை லோகியே. கிட்டதட்ட அறுபதுக்கு மேற்பட்ட பிரபலமான படங்களுக்கு
கதையால் உயிர் கொடுத்தவர். மிகச் சிறந்த படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நேரத்தில் நம் தமிழ் படங்கள் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இலக்கியவாதிகளை அங்கீகரிக்காத உலகம் அது. மிகச் சொற்பமான படங்களே
நாவல்களைத் தழுவி வந்துள்ளது. ஜெயகாந்தன்,மகேந்திரன் முக்கியமானவர்கள்.
மற்றபடி இங்கே கதை என்பது ஒரு கும்பலால் உருவாக்கப் படுகிறது இயக்குனருக்காக.
மலிவான விலையில் கிடைக்கும் டிவிடிக்கள் புண்ணியத்திலும் கதைகள்
உருவாக்கப் படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் கொஞ்சம்
முயற்சிக்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த கதைகளும்,கதையாசிரியர்களுமுண்டு.
அவர்களைப் பயன் படுத்திக் கொண்டால் நடிகர்கள் பின்னால் போய் தலையில்
துண்டு போட்டுக் கொள்ள அவசியம் ஏற்படாது. ஒளிப்பதிவாளர்கள்,இசையமைப்பாளர்கள்,
பாடலாசிரியர்கள் இவர்களை விட கதையாசிரியர்கள் சிறந்த படத்துக்கான ஆணிவேராய்
இருக்கக் கூடியவர்கள். இலக்கியவாதிகளின்றி இனி திரைஉலகம் இல்லை
என்ற நிலை வரவேண்டும்.
வரும்.
காத்திருப்போம்.

புதன், 14 ஜூலை, 2010

சோளகர் தொட்டி


மிகவும் தாமதமாகத்தான் ராவணன் பார்த்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு கேனத்தனமானப் படம்.
புறங்கையால் தள்ள வேண்டிய படம்.
அவ்வளவே. இதுக்கா பதிவுலகில் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்.
ஒருவர் மணிரத்னம் அம்பானியின் அடிவருடி என்கிறார்.
மற்றொருவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்கிறார்.
பிறிதொருவரோ பார்ப்பன சதி என்கிறார்.
இந்தச் சமயத்தில் “ சோளகர் தொட்டி” ஐ நினைவு கூர்கிறேன்.
நீண்ட காலமாக மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்புடையவரான வழக்கறிஞர் ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவலே சோளகர் தொட்டி. இதனை நாவல் வடிவத்தில்
அமைந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை வனதேவதையின் குழந்தைகளாகிய
மலைவாழ் மக்களிடம் நடத்திய கொடூரங்களைப் பற்றி சொல்கிறார்.

’’எங்கேடி உன் புருஷன்? '' என்றான் அதிகாரி.

''தெரியாதுங்க''

''இவளுக்கும் கரண்ட் கொடுங்க'' என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர்பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவர் முட்டி நின்றாள். அவளது காதுகளில்இரண்டு கிளிப்புகளும் அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக்கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின் அதன் கருப்பு நிறப்பொத்தானை அழுத்தினான்.

''அட சாமி'' என அவள் அறை முழுவதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது.அவள் பள்ளத்தில் வீழ்வது போல் உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கேதலை முதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க முடியாது.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.

ஆசிரியர் - ச.பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடித் தெரு, பவானி - 638301.

பின் குறிப்பு : வீரப்பனை அழித்தாகி விட்டது. விருதுகளும் பெற்றாகிவிட்டது.
இருவருக்குமிடையே பாதிக்கப் பட்ட மக்களுக்கு..?
கேள்விக் குறிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமில்லை.

திங்கள், 12 ஜூலை, 2010

குழந்தைகள் வாழ்க



நண்பர் அஹமத் இர்ஷாத் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.
உபரியாய் ஒரு சுதந்திரமும் கொடுத்திருந்தார். எந்த தலைப்பில் வேண்டுமானாலும்
எழுதலாம். நன்றி இர்ஷாத்.
என்னை மிக மிக கவர்ந்த ஒரு புத்தகம்.
"குழந்தைகள் வாழ்க".
இது ஒரு மாஸ்கோ பதிப்பக நூல்.
ஷ.அமனஷ்வீலி எழுதியது.
அமனஷ்வீலி சோவியத் விஞ்ஞானி,மனோதத்துவ டாக்டர்,பேராசிரியர்.
முதன் முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரும்
முறைகளையும்,வழிகளையும் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூலில் வரும் முதல் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் சேர வரும் குழந்தைகளுக்கு
பள்ளி திறக்கும் முன்பாகவே அவர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதுகிறார் வாழ்த்து
அட்டையுடன்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அக் குழந்தைகளின் பெயர்,அவ்ர்களின்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு
இது மாதிரியான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விடுகிறார்.
முதல் நாள் ஒவ்வொரு குழந்தையின் பெயர் சொல்லி அழைத்து
பரிசு பொருட்கள் வழங்குகிறார்.
அட்டைகள்,படங்கள்,சின்னச் சின்ன பொருட்கள் இவைகள் தான்
பாடத்தின் கரு.
குழந்தைகள் பாடுகின்றன.. ஆடுகின்றன.. விளையாடுகின்றன..
வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலிருந்தும் ஒருவர்
விருந்தினராக அழைக்கப் படுகிறார். ஒரு விருந்தினர் கதை சொல்கிறார்.
மற்றவர் பாடிக்காண்பிக்கிறார்.இன்னொருவர் மேஜிக் செய்து காட்டுகிறார்.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு புத்ததகம் தயாரிக்கிறார்கள். அவரவர்க்குப்
பிடித்த படங்களை ஒட்டி. அந்தப் புத்தகங்களை வைத்து ஒரு சின்னஞ்சிறு
நூலகம். ஒருவர் மற்றவருக்கு உதவுவது முக்கியமான பாடம்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் ஒரு பட்டியல் போடுகிறார்.

ஆசிரியரின் கட்டளைகள்,ஏவல்கள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? - கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைத் தரலாமா? - கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? - கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று
சொல்லலாமா? - கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்காரவேண்டும்
என்று சொல்லலாமா?- கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப்
பிடுங்கலாமா? - கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? - கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம்
சொல்லலாமா? - கூடாது.
இந்தக் கூடாது வகையறாக்களைத் தான் நம் பள்ளிகள்
செய்து கொண்டிருக்கின்றன.
இதை நாமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசிப்போம்.

சனி, 26 ஜூன், 2010

அருந்ததிராயும், வாஸந்தியும்


உயிரோசையில் வாஸந்தி அவர்கள் “ அருந்ததிராய்
எழுதிய ஒரே புத்தகம் “ என்று தலைப்பிட்டு
அருந்ததியின் The God of small things பற்றி
எழுதியுள்ளார். தலைப்பிலேயே ஒரு எள்ளல்
தொனிக்கிறது. இந்த நாவல் அமெரிக்க நாவலான
TO KILL A MOCKINGBIRD ன் சாமர்த்தியமான
தழுவல் என்று ஒரு விமர்சகரிடமிருந்து
குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக எழுதியுள்ளார்.
அமெரிக்க நாவல்களை படிக்க விருப்பமில்லாத
அருந்த்ததி To kill a mockingbird ஐ மட்டும்
படித்திருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதாக
விமர்சகர் குறிப்பிட்டிருப்பதாக ( எத்தனை ஆக )
வாஸந்தி சொல்கிறார். 1997 ல் வெளிவந்த
அருந்ததியின் நாவல் 1960 ல் வந்த அமெரிக்க
நாவலின் தழுவல் என்று ஒருவர் 2010 ல்
கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அதுவும்
மீள்வாசிப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதை
நம் வாஸந்தி எல்லோர் பார்வைக்கும் கொண்டு
செல்கிறாராம். அது மட்டுமில்லை புக்கர் பரிசு
கிடைத்ததற்கு காரணமாக அவர் சொல்வது மிகவும்
ஆபாசமாக உள்ளது. அதுவும் அவர்
சொல்லவில்லயாம். கருணையில்லாமல் யாரோ
சொன்னதாக இவர் சொல்கிறார். யாரோ
சொல்லியிருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளரைப்
பற்றி இன்னொரு பெண் எழுத்தாளர் இப்படி
சொல்லலாமா? எழுத்தில் பெண்,ஆண் என்று
பிரித்து பார்ப்பது ஆணாதிக்கம் என அம்பு
தொடுக்கும் புரட்சிப் புயல்கள் இதற்கு
ஆட்சேபணை தெரிவிக்க நேரிட்டாலும்
பரவாயில்லை. அருந்ததி அடுத்த நாவலை
எழுதாதற்கு காரணத்தை இந்த கும்பல்
கண்டுபிடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
அதனாலேயே தன்னை ஒரு சமூகப் போராளியாக
இனம் காட்டிக்கொண்டு தனது அமெரிக்க
துவேஷப் பேச்சுக்களால் கட்டுரைகளால்
உலகத்தின் கவனத்தைப் பெறப்பார்க்கிறார்.
ஏழைகளின், பழங்குடிகளின் பங்காளி என்கிறப்
போர்வையில் உலவும் ஜனநாயக விரோதி.
பயங்கரவாதி என்று வசை மாறியாக
விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த வரிகளில்
ஒரு செய்தி ஒளிந்திருப்பதாகவே எனக்குப்
படுகிறது.Enron எதிர்ப்பு நர்மதா நதி அணை
எதிர்ப்பு,பழங்குடியினருக்கு ஆதரவு,
மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு இவைகள்தான்
அருந்ததியின் எழுத்து மீதான குற்றச்சாட்டுக்கு
உண்மையான காரணமோ என்ற கேள்வி
எழுவதை தடுக்க முடியவில்லை.
அருந்ததியின் இந்திய அரசாங்க எதிர்ப்பு
மற்றும் அமெரிக்க அரசாங்க எதிர்ப்பு
இவைகளைத் தாங்க முடியாத ஏதோ ஒரு
சக்தி இதன் பின்னாலிருக்கச் சாத்யமுண்டுதானே?
Theory of probability....
வாஸந்தி To kill a mockingbird ஐ படித்துவிட்டு
எழுதினார என்பது எனக்கு தெரியாது. ஆனால்
நான் படிக்கவில்லை.படிக்காமலே இவ்வளவா
என்ற கேள்வி எழுவது நியாயம் தான். தேடி
படித்து எழுதுவதற்கு சற்று
காலதாமதமாகிவிடலாம். சந்தேகத்தின் பெயரில்
ஆயிரம் குற்றவாளி தப்பித்துவிடலாம். ஆனால்
சந்தேகத்தின் பெயரில் ஒரு குற்றமற்றவர் கூட
தண்டிக்கப்படக் கூடாதென்பது பொது நியதிதானே?
மீண்டும் Theory of probability..
1968 ல் கீழவெண்மணியில் தீவைத்துக்
கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்றும்
கண்ணீர் வடிக்கும் சிகப்புச் சிந்தனாவாதிகள்
2007 ல் நந்திகிராமத்தில் டாடாவுக்காக
விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு
நடந்தபோது மேதாபட்கரையும்,அருந்ததிராயயும்
பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க அனுமதி தர
மறுத்த செய்தி இந்த நேரத்தில்
ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.

"A novel of real ambition must invent
its own language,and this one does...."

- JOHN UPDIKE,THE NEW YORKER.
இது The God of small things பற்றி
அமெரிக்க பத்திரிக்கையில் வெளிவந்த குறிப்பு.

கடைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே தகுதி
எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா?

செவ்வாய், 25 மே, 2010

Chetanbhagat


Tolstoy
Dostovesky
Kafka
Marquez
Orhan Pamuk
எனத்
தீவிரமாய் வாசிப்பவர்களும்
சேத்தன்பகத்தை
வாசிக்கலாம்.

Tagore
R.K.Narayan
Khushwant
Naipal
Rushdie
Amitav Ghosh
Anitha Desai
Vikram Seth
Arunthathi
Jumba Lahiri
Kiran Desai
என்ற வரிசையில்
Chetan Bhagat க்கும்
இடமுண்டு.

the 3 mistakes of my life.

வியாபாரம்
கிரிக்கெட்
மதம் எனத்
தனித் தனி நோக்கங்கள் கொண்ட
மூன்று குஜராத்தி இளைஞர்கள்
மற்றும் ஒரு இஸ்லாமியச் சிறுவன்
இவர்களைப் பற்றிய கதை.
கோத்ரா ரயில் எரிப்பு அதன் பின்
நடந்த படுகொலைகள்.
இந்தப் பின்னணியில் கதை.
எளிய நடை.
மெலிதான நகைச்சுவை.
குறைந்த விலையில்
Rupa & Co வெளியிட்டுள்ளார்கள்.
இது பகத்தின் மூன்றாவது நாவல்.
முதல் நாவல் Five point someone.
அனைவரும் அறிந்ததே.
ஆம்.
3 Idiots ன் வேர்.

சனி, 20 மார்ச், 2010

எழுத்தாள நண்பர்கள்




ப்ரகாஷ்
நா.விச்வநாதன்
தஞ்சாவூர்க் கவிராயர்
சி.எம்.முத்து
ஹரணி
சுந்தர்ஜி
புத்தகன்
ரிஷபன்
கிருஷ்ணா
சுப்ரமண்யன் ரவிச்சந்திரன்
கேவிஎஸ்
கலைமணி
சீதளா

என் நண்பர்கள்
என்பதற்காக மட்டும்
சொல்லவில்லை.

இவர்களைத்
தேடி மூழ்கினால்
முத்துக்கள் நிச்சயம்.

திங்கள், 15 மார்ச், 2010

விருப்பமான பத்து நாவல்கள்

01. அம்மா வந்தாள் - தி.ஜானகி ராமன்
02. அபிதா - லா.ச.ரா
03. காகித மலர்கள் - ஆதவன்
04. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
05. தண்ணீர் - அசோகமித்ரன்
06. ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி
07. ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசரதி
08. சாயாவனம் - சா.கந்தசாமி
09. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
10. பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

புதன், 10 மார்ச், 2010

BOOKS

நல்ல புத்தகங்களைப் பழையப் புத்தகக் கடைகளில்
முன்பு பார்த்தால் மிகவும் சந்தோஷமாய் இருக்கும்.
இப்போது பார்த்தால் மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
காரணம் வயது ஏறிக்கொண்டிருப்பது மட்டுமல்ல.
தேடித் தேடி நாம் சேர்த்தப் புத்தகங்களுக்கும் இந்தக்
கதி தானோ என்ற பயமும் கூட.
நம் குழந்தைகள் இந்தப் புத்தகங்களை பாதுகாப்பார்களா?
அவர்களுக்குப் படிப்பதற்கான ஆர்வத்தை எப்படி
உண்டாக்குவது?
பள்ளிக்கூடங்கள் சகல வித்தைகளும் சொல்லித்
தருவதாய் அறிவிக்கிறார்கள்.
ஆனால் படிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது போல்
தெரியவில்லை. சகலத்தையும் பள்ளிதான்
சொல்லித் தரவேண்டுமா?
நம்மால் முடியாதா?
கேள்விகள் தலையைச் சுத்த வைக்கின்றன.
படிப்பு நம்மை எவ்வளவு மென்மையாகவும்,
மேன்மையகவும் ஆக்கியிருக்கிறது என்பதை
நம்மால் உணர முடிகிறது. ஆனால் அதை
எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பது?
Spider man, Hulk, video games இன்ன பிற
சமாச்சாரங்களை புத்தகங்கள் எப்படி
வெல்லப் போகின்றன?
புத்தகங்களின் வெற்றிக்காய்ப்
பிரார்த்திப்போமாக.