ஞாயிறு, 30 மே, 2010

வர்ண பேதம்

தவறுவதில்லை.
ஏழுமலையானுக்கு
லட்டு.
பழனியாண்டவனுக்கு
பஞ்சாமிர்தம்.
குழலூதுபவனுக்கு
வெண்ணெய்யும்,சீடையும்.
ஆற்றங்கரை நேசனுக்கு
கொலுக்கட்டை.
கருவேலமரக்
காட்டில்
மீசை முறுக்கி
அரிவாள்
தூக்கினவருக்கு
கண்ணில்
காட்டவேயில்லை
கள் கலயம்
கொஞ்சம்
சுருட்டுகள்
நீர் தெளிக்க
தலை
சிலுப்பும்
ஒரு கிடா.

ஒரு கப் zen

வாள் வித்தை
பயில
வந்தவரிடம்
தேநீர்
ஆற்றச்
சொன்னதாய்
ஒரு Zen.

கிழிபடாமல்
நீளமாய்
தேநீர்
ஆற்றும்
கடைகாரருக்கு
அந்த zen
குறித்த
அபிப்ராயம்
யாதாயிருக்கும்
என்ற
சிந்தனையோடு
ஆரம்பமாகிறதென்
நாள்.

மற்றுமொரு செய்தி


குழல்
பறக்க
மின்மினிகளை
துரத்திக் கொண்டு
ஓடுபவளின்
உள்ளங்கை
வெதுவெதுப்பில்
பதுங்கிகொள்ள
நட்சத்திரங்கள்
விருப்பம்
தெரிவித்திருப்பதாய்
செய்தியொன்று
வந்தது
நேற்றைய
கனவில்.

செவ்வாய், 25 மே, 2010

முடிவல்ல ஆரம்பம்

இன்னும் சிறிது நேரத்தில்
பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு வரப் போகிறது.
வென்றவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற
இயலாதவர்களுக்கு
நம்பிக்கை.
தோல்வி என்பது
வெற்றியின் குழந்தைப் பருவம்.
பெற்றொர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
மதிப்பெண் அடிப்படையில்
உங்கள் குழந்தைகளை
அணுகாதீர்கள்.

Chetanbhagat


Tolstoy
Dostovesky
Kafka
Marquez
Orhan Pamuk
எனத்
தீவிரமாய் வாசிப்பவர்களும்
சேத்தன்பகத்தை
வாசிக்கலாம்.

Tagore
R.K.Narayan
Khushwant
Naipal
Rushdie
Amitav Ghosh
Anitha Desai
Vikram Seth
Arunthathi
Jumba Lahiri
Kiran Desai
என்ற வரிசையில்
Chetan Bhagat க்கும்
இடமுண்டு.

the 3 mistakes of my life.

வியாபாரம்
கிரிக்கெட்
மதம் எனத்
தனித் தனி நோக்கங்கள் கொண்ட
மூன்று குஜராத்தி இளைஞர்கள்
மற்றும் ஒரு இஸ்லாமியச் சிறுவன்
இவர்களைப் பற்றிய கதை.
கோத்ரா ரயில் எரிப்பு அதன் பின்
நடந்த படுகொலைகள்.
இந்தப் பின்னணியில் கதை.
எளிய நடை.
மெலிதான நகைச்சுவை.
குறைந்த விலையில்
Rupa & Co வெளியிட்டுள்ளார்கள்.
இது பகத்தின் மூன்றாவது நாவல்.
முதல் நாவல் Five point someone.
அனைவரும் அறிந்ததே.
ஆம்.
3 Idiots ன் வேர்.

திங்கள், 24 மே, 2010

சேர்ந்திசை


எவரோ
எழுதிய
இசைக்
குறியீடுகளுக்கு
உயிர்
கொடுக்கும்
இசை நடத்துனரின்
கையிலிருக்கும்
மந்திரக்கோல்
போல்
இடவலமாய்
அசைந்து
கொண்டிருக்கிறது
மூங்கில் மரங்கள்.

மறதி


எதிர்
ஜன்னலில்
விரையும்
முகங்களைப்
போல்
ஞாபக
விளிம்பிலிருந்து
நழுவுகின்றன
நேற்றைய
கனவில்
கேட்ட
இசையின்
வடிவங்கள்.

புதன், 19 மே, 2010

துயருறும் இசை


விரல்களின்
ஸ்பர்சம்
மறந்து
தூசிபடர்ந்த
பியானோவின்
மெளன
விசும்பல்
கேட்டு
வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
காலடிதடத்தைப்
பற்றிக்கொண்டு
மேலெழும்புகிறது
மெலிதான
சங்கீதம்.

மின் மினிகள்


அறை
நிரம்பி
வழிகிறது
பரிசு
பொருட்களால்.
ஐந்து
புகைப்பட சட்டங்கள்.
நான்கு
சுவர்க்கடிகாரங்கள்.
மூன்று
தேநீர்க்கோப்பை
தொகுதிகள்.
இரண்டு
இரவு விளக்குகள்.
ஒரு
குடிநீர் வடிகட்டி.
இன்ன பிற
பொருட்குவியலின்
நடுவே
காணக்
கிடைக்கவில்லை
குழந்தையின்
புன்னகையையொத்த
ஒரு புத்தகம்.

உனக்கும் அமிழ்தென்று பெயரா ?


நீ
உன் பெயரை
சொல்லியிருக்கலாம்.
அதன்
காலடித்தடம்
என் மனசுக்குள்
பதியாமல் கூட
போயிருக்கலாம்.
சொல்லாததால்
ஆங்கில
திரைப்படத்தின்
இறுதியில்
திரையில்
ஓடும்
பெயர்களைப் போல்
ஓடுகின்றன
மனசுக்குள்
உனை
அழைப்பதற்கான
பெயர்கள்.

வளர்ப்பு


சங்கிலியில்
பிணைத்து
ஆட்களை
இழுத்துக்கொண்டு
ஓடும்
உயர் ஜாதி நாய்களை
வளர்த்ததில்லை.
அடுப்பில்
கொதிக்கும்
மீன் வாசத்துக்காய்
கால்களை
சுற்றிவரும்
பூனைகளை
வளர்த்ததில்லை.
சமுத்திரக்
கனவுகளுடன்
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கும்
தங்க மீன்களை
வளர்த்ததில்லை.
ஆகாயம் நோக்கி
வீசியெறிந்தும்
வட்டமிட்டு
கீழிறிங்கி
தோளில் அமரும்
புறாக்களை
வளர்த்ததில்லை.
இழந்த ஆகாயத்தை
கூண்டுக்குள் தேடி
பரிதவிக்கும்
காதற்கிளிகளை
வளர்த்ததில்லை.
எனினும்
வளர்கிறது
ஒரு மிருகம்
மனசுக்குள்.

செவ்வாய், 18 மே, 2010

T200


+2 தேர்வு முடிவு வெளியாகி
விட்டது.
மதிப்பெண் பட்டியலை
வைத்துக் கொண்டு
வீதிக்கு இரு பெற்றோர்கள்
புலம்பிக் கொண்டு
நிற்கிறார்கள்.
சிலபஸுக்கு வெளிய கேள்வி
கேட்டுட்டாங்க.
தப்பான கணக்கு கேட்டுட்டாங்க.
அந்த ஊர் டீச்சர் ஸ்ட்ரிக்டாத்
திருத்திட்டாங்க.
CEO ஆபிஸ் வாசலில்
நீளமான க்யூ.
நிழல் அச்சுத் தாளை
வாங்குவதற்கு.
மறு பக்கம்.
தனியார் பொறியியல்
கல்லூரியின் அட்டகாசம்.
அப்ளிகேஷன் குறைந்த பட்சம்
500 ரூபாய்.
டிசிஎஸ் ல கூப்டாக..
விப்ரோ ல கூப்டாக..
இன்ஃஃபோசிஸ் ல கூப்டாக..
இப்படி தப்பாட்டம் வேற.
தாய்மார்களே..
தந்தைமார்களே...
உங்கள் குழந்தையின்
மனசோடு பேசி
முடிவெடுங்கள்.
ஆகாசம் அளவு
வாய்ப்புகள் உள்ளன.

திங்கள், 17 மே, 2010

காதல் கொடி ஏற்றி


நீருள்
மூழ்க
மறுக்கும்
பலூன்
போல்
திமிறிக்
கொண்டு
கிளம்புகின்றன
நம்
காதல்
ஞாபகங்கள்
நம்
மகளின்
திருமணநிகழ்ச்சி
நிரல்களில்
ஒன்றாய்.

அற்புத விளக்கு


அலாவுதீனுக்குக்
கிடைத்தது போல்
எனக்கும்
கிடைத்தது
ஓர்
அற்புத விளக்கு.
தன்னையேத்
தேய்த்து
தேய்த்து
கவிதையாய்க்
கொட்டும்
அற்புத விளக்கெனில்
யாவர்க்கும்
விளங்குமோ?

உணர்தலின் வாசல்கடவுள்
இருக்கிறாரா
இல்லையா.
நண்பர்
கேட்டார்.
கடவுளிடமேக்
கேளும்
என்றேன்.
கேட்டாரா
இல்லயாத்
தெரியவில்லை.
அதன் பின்
என்னிடம்
கேட்கவில்லை
அக்கேள்வியை.

ஞாயிறு, 16 மே, 2010

விரும்பிப் பார்த்தது


பிடித்த பத்துப் படங்கள் ;

01. உன்னைப் போல் ஒருவன்
இயக்கம் : ஜெயகாந்தன்

02. அழியாதக் கோலங்கள்
இயக்கம் : பாலு மகேந்திரா

03. உதிரிப் பூக்கள்
இயக்கம் : மகேந்திரன்

04. அவள் அப்படித்தான்
இயக்கம் : ருத்ரைய்யா

05. தண்ணீர்.. தண்ணீர்
இயக்கம் : பாலச்சந்தர்

06. ஒரு இந்தியக் கனவு
இயக்கம் : கோமல் சாமிநாதன்

07. பதினாறு வயதினிலே
இயக்கம் : பாரதி ராஜா

08. இருவர்
இயக்கம் : மணிரத்னம்

09. இயற்கை
இயக்கம் : ஜனநாதன்

10. பசங்க
இயக்கம் : பாண்டிராஜன்

பிடிமானம்


ஆசையைத் துற.
புத்தனின்
கோட்பாட்டை
வழுக்குப் பாறையில்
ஏறிக்கொண்டிருக்கும்
என்னிடம்
போதிக்காதே.
விழுந்தால்
சாஸ்திரத்துக்குக்
கூட
ஓர் எலும்பு
மிஞ்சாது.
ஏறிக்
கொண்டிருக்கிறேன்
உயிர்
மீதான
ஆசையை
இறுகப்
பற்றிக் கொண்டு.

கண்மணி.....


பாறையாய்
கனக்கும்
உன்
மெளனத்தை
உருட்டிவிடு.
அதனடியில்
தான்
என்
நேச விதைகளைத்
தூவியிருக்கிறேன்.

அட்சயத் திரிதை


எம்
பள்ளிகளும்
ஜ்வலிக்கும்
நகைக் கூடங்கள்
தான்.
இங்கே
செய் கூலியும்
அதிகம்.
சேதாரமும்
அதிகம்.

வியாழன், 13 மே, 2010

அலைபேசி வழி மரணம்
மியாமி யுனிவர்சிட்டி மருத்துவமனை செய்தி :
சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த
செல்போனில் கால் வந்ததும்
பேசமுயன்ற ஓர் இளஞரின்
செல் வெடித்து சிதறியிருக்கிறது.
சிகிச்சையையும் மீறி
மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு
மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள
அனவருக்கும்.

எழுச்சியும் வீழ்ச்சியும்


விரல்களில்
தட்டுப்பட்ட
மகத்தான
வைரத்தை
விலக்கி
சப்தமிடும்
கூழாங்கற்களைத்
தேடி
ஓடுகிறோம்.


இந்தியாவே
எழுந்து நின்று
கைத்தட்ட
வேண்டும்
விஸ்வநாதன் ஆனந்துக்கு.

ஒரு வேண்டுகோள்


இதனால்
யாவருக்கும்
தெரியப்படுத்தும்
வேண்டுகோள்:
தயவு செய்து
சுறா படம்
குறித்த
குறுஞ்செய்தியை
எவரும்
அனுப்ப
வேண்டாம்.
அனுப்புகிறவர்களின்
ஆதங்கம்
புரிகிறது.
வீட்டுக்கு
ஒரு மரம்
இருக்கிறதோ
இல்லையோ
வீட்டுக்கு
ஒரு
விஜய் ரசிகர்
இருக்கிறார்.
ஆனால்
விஜய் வீட்டில்
மட்டும்
ஒருவரும்
இல்லை
போலிருக்கு
விஜயையும்
சேர்த்துதான்.

புதன், 12 மே, 2010

கடவுளைத் தேடி வந்தவள்


பறக்கும்
தட்டிலிருந்து
வந்திறங்கியவள்
ஜாடையில்
பெண்ணைப்
போலிருந்தாள்.
விசாரித்ததில்
தெரிந்தது.
அவள்
கடவுளைத்
தேடி வந்ததாக.
இங்கே
தனியாகக்
கடவுள்
என்று
எவருமிலர்.
என் பதில்
கேட்டு
வியந்தவளிடம்
சொன்னேன்.
ஏனெனில்
இங்கே
சாத்தான்களும்
இல்லை.
நம்பிக்கை
இல்லாமல் தான்
புறப்பட்டுச்
சென்றாள்
அந்த
பூமிப் பெண்.

ஒரு கத்துக்குட்டியின் சமையல் குறிப்பு


முதலில்
அடுப்பைப்
பற்றவைக்கவும்.
கைப்பிடி
நீளமானக்
கடாயை
அடுப்பில்
ஏற்றவும்.
மிகச் சரியாக
250 மி.கி.
மார்க்ஸிஸம்
எடுத்து
கடாயில்
கொட்டி
பொன் நிறம்
வரும் வரை
வறுக்கவும்.
வறுக்கும் போதே
இரண்டு சிட்டிகை
தலித்தியம்
சேர்க்கவும்.
நிறைய
நீர்
விட்டுக்
கலக்கவும்.
உடன்
பெண்ணியத்தை
மிக்ஸியில்
அடித்து
இரண்டு
விழுது
சேர்க்கவும்.
நாலைந்து
பின்
நவீனத்துவத்தை
நீளமாகக்
கீறிப்
போடவும்.
திரவ
நிலையிலிருந்து
திட
நிலைக்கு
மாறும்
புள்ளியில்
மத ஒற்றுமையை
மூன்று
தேக்கரண்டி
விட்டு
லேசாகக்
கிளறவும்.
சுவையானக்
கவிதை
தயார்.

திங்கள், 10 மே, 2010

நினைவுக் குறிப்புகள்


திண்ணையில்
முடக்கப்பட்ட
முதியவளின்
சமையலறை
ஞாபகங்களின்
மிச்சங்களும்
மணலில்
புதைந்து
உடைந்த
ஒற்றைப்
படகின்
கடற்பயணங்களின்
ஈரவரிகளும்
காத்திருக்கின்றன
ஒரு
தொல்பொருள்
வல்லுநரின்
எழுதுகோலுக்காய்.

இன்னமும் தீரவில்லை


சூரியன்
உட்புகா
வனத்தின்
அடர் இருளில்
சருகுகளின்
முணுமுணுப்பில்
தூரத்து
நீர்வீழ்ச்சியின்
சப்தத்தை
நோக்கி
நகரும்
திசை
இழந்தவனின்
விரல் பற்றி
ஒற்றைத்
தீபமாய்
அழைத்துச்
செல்வது
அவனது
எஞ்சியுள்ள
வாழ்வின்
மீதானத்
தீராக்காதலோ?

பூக்களைக் கேட்டுப் பார்


பூக்கள்
அழகானவை.
ஆம்.
பூக்கள்
மிருதுவானவை.
ஆம்.
பூக்கள்
வாசமானவை.
ஆம்.
எனில்
அவற்றைச்
செடிகளிலேயே
விட்டு விடுங்கள்.
ஒரு நாள்
வாழ்வெனினும்
அவைகள்
வாழ்ந்துத்
தீர்க்கட்டுமே.

சனி, 8 மே, 2010

பொருள் வயிற் பிரிவுகுளிரூட்டி
குளிர்சாதனப்பெட்டி
தொலைக்காட்சிப்பெட்டி
சலவை இயந்திரம்
அலைபேசி
மடிக்கணினி
நான்குசக்கர வாகனம்
இரண்டுசக்கர வாகனம்
நான்கு வங்கியின்
பண அட்டை
பொருள்களால்
நிரம்பி
வழிகிறதென்
பிரம்மாண்ட வீடு.
என் பிரியத்திற்குரியப்
பெண்ணின்
விழியோரங்களிலிருந்து
உருளும்
கண்ணீர்த் துளிகளை
விரல் நீட்டித்
துடைக்க
முடியவில்லை
காமிரா
வழியாக.

வெள்ளி, 7 மே, 2010

யுத்தம் பழகு


காலாட்படை
புரவிப்படை
யானைப்படை
தரை வழித்
தாக்குதல்
வான் வழித்
தாக்குதல்
நீர் வழித்
தாக்குதல்
யுத்தக்
கலைகளின்
அறிமுகமுண்டு.
இதென்ன
புதிதாய்..
ஓர விழிப்
பார்வையாலும்
உதட்டுச்
சுழிப்பாலும்
விரல் நுனித்
தீண்டலாலும்
ஓர்
இனிய யுத்தம்.

வைரமாய் ஒரு வார்த்தை


வடிந்து
கொண்டிருக்கும்
இரவு
வற்றுவதற்குள்
அந்த
வார்த்தையைக்
கண்டடைய
வேண்டும்.
உருண்டு
உருண்டு
மொண்ணையாகிப்
போன
கூழாங்கற்களின்
குவியலுக்கிடையே
வைரமாய்
ஜ்வலிக்க வேண்டும்
அந்த வார்த்தை.
முதல்
வார்த்தையால்
தானே
கவிதை
தன்
சாளரத்தைத்
திறந்து வைக்கிறது?

வியாழன், 6 மே, 2010

மீண்டும் ஒருசர்க்கஸ்
கூடாரத்தைப்
பிரிப்பவனை
ஏக்கத்துடன்
பார்க்கும்
சிறுவனைப் போல்
ஏங்கித்
தவிக்கிறது
உனக்கான
கடிதங்கள்.

ஒரு கையசைப்பு


சின்னஞ்சிறு
ரயில் நிலையங்களை
நீங்கள்
தடதடத்துக்
கடக்கும் போது
உங்களின்
பிரியமானக்
கையசைப்பை
விட்டு
வாருங்கள்
மஞ்சள் சரக்கொன்றை
மரத்தடி பெஞ்சில்
வந்தமரப் போகும்
உறவுகளால்
விலக்கப்பட்ட
ஒரு முதியவருக்கு.

மாலை நேரத்து மயக்கம்இங்கே ஆட்கள்
வேலை செய்கிறார்கள்.
இங்கே வேலைக்கு
ஆட்கள் தேவை.
இத்தகைய
விளம்பரப் பலகைகள்
தேவையில்லை.
மாத சம்பளம்
இல்லை.
வருடாந்தர
ஊக்கத் தொகை
இல்லை.
ஊதியத்துடன்
விடுப்பு
இல்லை.
வேலை நிறுத்தம்
இல்லை.
அனல்மூட்டும்
சங்கம்
இல்லை.
என்ன..
இனி வரும்
ஒரு
சாயங்காலத்தில்
என் குரல்வளையை
நசுக்கும்
எந்திரனைத்
தடுக்க
யாதொரு
மனிதனும்
இருக்கப்
போவதுமில்லை.

செவ்வாய், 4 மே, 2010

வளர்க இந்தியாஇன்வெஸ்ட்மெண்ட் குரு என்றழைக்கப் படும் Mr.Warren Buffett
அடுத்த வருடம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகக்
கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 10 வருடங்களில்
இந்தியா பொருளாதாரத்தில் மிக வலுவான நிலையை அடைந்துள்ளதாகவும்
கூறியுள்ளார்.
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்.
தனிமனித வழிபாடு எனத் தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
நம் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுத் தூர்ந்து போன நம்
காதுகளுக்கு ஒரு வெளிநாட்டுக்காரரின் குரல் இனிதுதான்.
ஆம்.
திரு.வாரென் ஓர் அமெரிக்கர்.
கம்யூனிஸ்ட்கள் மன்னிக்க.
Berkshire Hathway ன் Chairman மற்றும் CEO.
உபரியாய் ஒரு செய்தி.
coco cola ஷேரின் ஒரு பகுதியை வைத்திருக்கிறார்.
Buffett முதலீடு செய்கிறார் எனக் கேள்விப்பட்டாலே
வெளி முதலீடு வெள்ளமெனப் பெருகும்.சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு.
Superstar என Buffett ஆல் அழைக்கப் படுபவர் திரு.அஜித் ஜெயின்.
பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல...
ஆம்.
அஜித் ஜெயின் ஓர் இந்தியர்.
Warren Buffett ன் வாரிசாக நியமிக்கப் படப் போகிறவர்.
Ajith பற்றி Buffett என்ன சொல்கிறார் கேளுங்களேன் :

If Charlie(Bufett's partner),I and Ajith are ever in a
sinking boat- and you can only save one of us- swim to
Ajith(Jain).

Hats Off Ajith.Warren Buffett பற்றிக் கடைசியாய் ஒரு செய்தி :

தன்னுடைய சொத்தில் 85 சதத்தை BILL GATES இன் Foundation க்குக்
கொடுத்தார்.. கொடுத்துக்கொண்டிருக்கிறார்..
கொடுக்கப் போகிறார்.
செல்வம் என்பது அடைந்ததில் அல்ல
வழங்குவதில் தான் உள்ளது.

60X40


பிளாட் வாங்கலியோ பிளாட்.
கூவிக் கூவி அழைப்பது என் காதிலும்
விழத்தான் செய்கிறது.
ஆனா வாங்கத்தான் மனசில்லை.
எனக்கு பிபி இருக்கு.
எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு.
எனக்கு சுகர் இருக்கு.
என்பது போல ஊருக்கு வெளியே எனக்கு
ரெண்டு பிளாட் இருக்கு.
என்று சொல்லாத ஆட்களை
இப்போது விரல் விடாமலே
எண்ணிவிடலாம்.
அதில் அடியேனையும் சேர்க்க.
மேலே சொல்லப்பட்ட ஊருக்கு வெளியே
என்பது ஒரு Under statement.
அடுத்த ஊருக்கு அருகே எனப் பொருள்
கொள்க.
நெருங்கி காதோடு காதாக விசாரித்தால்
யார்யா அங்கே வீடு கட்டுவார்கள்?
எல்லாம் இன்வெஸ்ட்மெண்ட்டுக்குத்தான்.
Warren Buffet போல் மந்தகாசத்துடன்
சொல்கிறார்கள்.
பொண்ணு படிப்பா...
பையன் கல்யாணமா..
ஒரு பிளாட்டை வித்தாப் போதும்.
அது சரி. இப்படியேப் போனா
அதை யார் வாங்குவா?
அமெரிக்காவில் இதானே நடந்தது.
அமெரிக்கப் புலி சூடு
பட்டதுக்கு எல்லா நாட்டுப்
பூனைக்குட்டிகளும்
மியாவ்..மியாவ்.. ன்னு
கத்தினது காதில் இன்னும்
கேட்டுட்டுதானிருக்கு.
நம் மனசை 60 க்கு 40
என்று சுருக்கிக் கொள்ளாமல்
ஆகாயம் அளவுக்கு
விரிவாக்குவோம்.
விளைநிலங்களை
பாதுகாப்போம்.
விவசாயிகளை விவசாயிகளாய்
இருக்க விடுவோம்.

ஹிந்தி நஹி மாலும்


சமீபத்தில் ரசித்த ஹிந்திப் படங்கள்( சப்டைட்டிலுடன்)

THE LAST LEAR
DEV D
KAMINEY
TAHAAN
DASVIDANIYA
ROCK ON
FASHION
3 IDIOTS
DILKABADDI
SAAS BAHU AUR SENSEX

ஞாயிறு, 2 மே, 2010

கடவுளின் புத்திரர்கள்


கவிஞர்களின் கவிஞர்கள் :
பாரதி
ஞானக்கூத்தன்
தேவதேவன்
பசுவய்யா
கல்யாண்ஜி
மீரா
விக்கிரமாதித்யன்
மனுஷ்யப்புத்திரன்
சல்மா
சுகிர்தராணி

புதிரின் ரகசியக் குறியீடுகள்


புதிர்களை
விடுவிக்க
யத்தனிக்கையில்
விரியும்
வெற்றிடத்தைக்
கடக்கும்போது
முதல் முடிச்சு
அவிழ
கண்ணெதிரே
ஒற்றை நூல்
நடனமிடும்
நம்
கைப்பற்றுதலுக்காய்.

சனி, 1 மே, 2010

அசந்தர்ப்பம்


நங்கூரம்
பாய்ச்சி
அலையினூடே
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும்
கடற்கொள்ளையன்
போல்
காத்துக்கொண்டிருக்கிறது
ஒரு
சந்தர்ப்பம்
தனக்கானச்
சாத்தியத்தை
நோக்கி.

தரிசனம்


அலந்து திரியும்
வெளவ்வால்களுக்காய்
ஆடாமல்
அசையாமல்
ஒற்றைச் சுடர்.