திங்கள், 23 ஆகஸ்ட், 2010

1 சந்தோஷமும் 3 எரிச்சல்களும்

வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால்
அவர்கள் வருமானம் ஈட்டாதப் பிரிவைச் சார்ந்தவர் என்ற வகையில் சொற்பத்
தொகையே இழப்பீடாக வழங்கப் படும். இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம்
வருமனம் ஈட்டாதவர்கள் பிரிவில் வேலைக்குப் போகாத குடும்பத் தலைவிகள்
அதன் பின் வருபவர்கள் பிச்சைக்காரர்கள் மற்றும் விபச்சாரம் செய்பவர்கள்.
ஆனால் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து குடும்பத்
தலைவிகளின் பங்கு குறித்து சிலாகித்துப் பேசி பெரும் தொகையை இழப்பீடாக
தரச் சொல்லியிருக்கிறார்கள். இது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விஷயம்
மட்டுமல்ல. இனி வரும் தீர்ப்புகளுக்கு இது மிகவும் உதவிகரமாயிருக்கும்.

*******************************************

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பொறுப்பாளருக்கு அரசின் வழிகாட்டலை மீறி
300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்கான வழக்கில் அவருக்கு ஜாமீன்
தொகை ரூபாய் 200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இடத்தில் நம்
நினைவுக்கு வருவது போபால் பேரழிவிறகு காரணமானவர்களுக்கு
நிர்ணயிக்கப்பட்ட ஜாமீன் தொகை...
சில ஆயிரங்கள் மட்டுமே....!

*******************************************

மற்றொரு வழக்கில் வரதட்சணை கேட்பது சட்டப்படிக் குற்றமில்லை.
வரதட்சணைக் கேட்டு பெண்ணை உடல்ரீதியாகத் துன்புறுத்தினால்தான்
குற்றமென தீர்ப்பு வந்துள்ளது. அனைத்து மகளிர் இயக்கங்களும் இதனை
எதிர்த்துள்ளன.

*******************************************

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய் பதினாறாயிரத்திலிருந்து
எண்பதாயிரம்.
இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான காகித தயாரிப்புக் கம்பெனி
இருபது மூங்கில் கழிகள் கொண்ட ஒரு கட்டுக்கு நிர்ணயித்துள்ள விலை
ரூபாய் ஒன்று. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே இருபது பைசாவிலிருந்து
ஒரு ரூபாயாக ஏறியிருக்கிறது. இந்த மூங்கில் கழிகளை, வன அதிகாரிகளிடமிருந்து
மீண்டு குறந்த பட்சம் பத்து கிலோ மீட்டர் தலையில் சுமந்து, மலைப்பாதையில் இறங்கி வந்து இந்த ரூபாயைப் பெறுகிறார்கள் மலைவாழ் மக்கள்.

**************************************************

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள

விளையாட்டுக்களால்
கரை புரண்டு
ஓட வேண்டிய
குழந்தைகளின்
மாலைப் பொழுதுகள்
வீட்டுப் பாடங்களால்
தேங்கி நாறுகின்றன.

******************

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

*****************

அவிழ்த்து
வைத்த
ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
மனசுக்குள்.

*****************

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சில கேள்விகளும் சில புரிதல்களும்

தோழியர் கயல் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார்கள்.
மிக்க நன்றி.
பதிவுலகை பொறுத்த வரை நான் ஒரு தவழும்
குழந்தை. எனினும் .....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மதுமிதா.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. நான் சந்தானகிருஷ்ணன். பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்த போது அந்தப் பெயரில் இருந்த வசீகரத்திற்காக அதை புனைந்து கொண்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

அது ஒரு சாதாரண விஷயம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எழுதுபவது மட்டும்தான் பிரதான செயல்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நூறு சதவீதம் கற்பனை என்ற ஒன்று உண்டா?.பின்னூட்டங்கள்
தான் பின் விளைவுகள்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதுவதில் உள்ள சுவாரசியத்திற்காக மட்டுமே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு. இரண்டும் தமிழ்.
மற்றொன்று :
http;//thejushivan.blogspot.com

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம், பொறாமை என்பவையெல்லாம் கொஞ்சம் தீவிரமான உணர்ச்சிகள். நல்ல எழுத்தைப் படிக்கும் போது ஏற்படுவது சந்தோஷம் மட்டுமே.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

நண்பர் சுந்தர்ஜி. ஆத்மார்த்தமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
சுந்தர்ஜி என்ற இதழை நடத்தி வருகிறார்.
அவர் அவசியம் படிக்கப் பட வேண்டியவர்.
அவரைப் படிக்க :
http://sundarjiprakash.blogspot.com

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி என் எழுத்துக்கள் சொல்லக் கூடும்.

இந்த பதிவைத் தொடர இவர்களை அழைக்கிறேன்

ரிஷபன்
ஹரணி
பாலா
பத்மா

பிரிய ரெஜி டீச்சர்

ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது