சனி, 26 ஜூன், 2010

அருந்ததிராயும், வாஸந்தியும்


உயிரோசையில் வாஸந்தி அவர்கள் “ அருந்ததிராய்
எழுதிய ஒரே புத்தகம் “ என்று தலைப்பிட்டு
அருந்ததியின் The God of small things பற்றி
எழுதியுள்ளார். தலைப்பிலேயே ஒரு எள்ளல்
தொனிக்கிறது. இந்த நாவல் அமெரிக்க நாவலான
TO KILL A MOCKINGBIRD ன் சாமர்த்தியமான
தழுவல் என்று ஒரு விமர்சகரிடமிருந்து
குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக எழுதியுள்ளார்.
அமெரிக்க நாவல்களை படிக்க விருப்பமில்லாத
அருந்த்ததி To kill a mockingbird ஐ மட்டும்
படித்திருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதாக
விமர்சகர் குறிப்பிட்டிருப்பதாக ( எத்தனை ஆக )
வாஸந்தி சொல்கிறார். 1997 ல் வெளிவந்த
அருந்ததியின் நாவல் 1960 ல் வந்த அமெரிக்க
நாவலின் தழுவல் என்று ஒருவர் 2010 ல்
கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அதுவும்
மீள்வாசிப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதை
நம் வாஸந்தி எல்லோர் பார்வைக்கும் கொண்டு
செல்கிறாராம். அது மட்டுமில்லை புக்கர் பரிசு
கிடைத்ததற்கு காரணமாக அவர் சொல்வது மிகவும்
ஆபாசமாக உள்ளது. அதுவும் அவர்
சொல்லவில்லயாம். கருணையில்லாமல் யாரோ
சொன்னதாக இவர் சொல்கிறார். யாரோ
சொல்லியிருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளரைப்
பற்றி இன்னொரு பெண் எழுத்தாளர் இப்படி
சொல்லலாமா? எழுத்தில் பெண்,ஆண் என்று
பிரித்து பார்ப்பது ஆணாதிக்கம் என அம்பு
தொடுக்கும் புரட்சிப் புயல்கள் இதற்கு
ஆட்சேபணை தெரிவிக்க நேரிட்டாலும்
பரவாயில்லை. அருந்ததி அடுத்த நாவலை
எழுதாதற்கு காரணத்தை இந்த கும்பல்
கண்டுபிடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
அதனாலேயே தன்னை ஒரு சமூகப் போராளியாக
இனம் காட்டிக்கொண்டு தனது அமெரிக்க
துவேஷப் பேச்சுக்களால் கட்டுரைகளால்
உலகத்தின் கவனத்தைப் பெறப்பார்க்கிறார்.
ஏழைகளின், பழங்குடிகளின் பங்காளி என்கிறப்
போர்வையில் உலவும் ஜனநாயக விரோதி.
பயங்கரவாதி என்று வசை மாறியாக
விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த வரிகளில்
ஒரு செய்தி ஒளிந்திருப்பதாகவே எனக்குப்
படுகிறது.Enron எதிர்ப்பு நர்மதா நதி அணை
எதிர்ப்பு,பழங்குடியினருக்கு ஆதரவு,
மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு இவைகள்தான்
அருந்ததியின் எழுத்து மீதான குற்றச்சாட்டுக்கு
உண்மையான காரணமோ என்ற கேள்வி
எழுவதை தடுக்க முடியவில்லை.
அருந்ததியின் இந்திய அரசாங்க எதிர்ப்பு
மற்றும் அமெரிக்க அரசாங்க எதிர்ப்பு
இவைகளைத் தாங்க முடியாத ஏதோ ஒரு
சக்தி இதன் பின்னாலிருக்கச் சாத்யமுண்டுதானே?
Theory of probability....
வாஸந்தி To kill a mockingbird ஐ படித்துவிட்டு
எழுதினார என்பது எனக்கு தெரியாது. ஆனால்
நான் படிக்கவில்லை.படிக்காமலே இவ்வளவா
என்ற கேள்வி எழுவது நியாயம் தான். தேடி
படித்து எழுதுவதற்கு சற்று
காலதாமதமாகிவிடலாம். சந்தேகத்தின் பெயரில்
ஆயிரம் குற்றவாளி தப்பித்துவிடலாம். ஆனால்
சந்தேகத்தின் பெயரில் ஒரு குற்றமற்றவர் கூட
தண்டிக்கப்படக் கூடாதென்பது பொது நியதிதானே?
மீண்டும் Theory of probability..
1968 ல் கீழவெண்மணியில் தீவைத்துக்
கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்றும்
கண்ணீர் வடிக்கும் சிகப்புச் சிந்தனாவாதிகள்
2007 ல் நந்திகிராமத்தில் டாடாவுக்காக
விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு
நடந்தபோது மேதாபட்கரையும்,அருந்ததிராயயும்
பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க அனுமதி தர
மறுத்த செய்தி இந்த நேரத்தில்
ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.

"A novel of real ambition must invent
its own language,and this one does...."

- JOHN UPDIKE,THE NEW YORKER.
இது The God of small things பற்றி
அமெரிக்க பத்திரிக்கையில் வெளிவந்த குறிப்பு.

கடைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே தகுதி
எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா?

வெள்ளி, 25 ஜூன், 2010

கனவும் , கனவும்

இரவு
தன்
சிறகுகளை
மடித்துக்
கொண்டிருந்த
விடியலில்
கனவு காண்பதாக
கனவொன்று
கண்டேன்.
கனவில்
வந்த
நான்
கனவு
கண்ட
என்னைப்
போலில்லை
என்ற
பதட்டத்தில்
கனவு
உதறி
துயில்
கலைந்தேன்.

வியாழன், 24 ஜூன், 2010

மீண்டும் ஒரு

மற்றொரு பிலாக்கிலும்
எழுத ஆரம்பித்துள்ளேன்.
தங்களின் வருகைக்கும்
வாசிப்புக்கும் கீழே :

http://thejushivan.blogspot.com

திங்கள், 21 ஜூன், 2010

மேலும் சில

வெள்ளமெனப்
பெருகும்
குறுஞ்
செய்திகளில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
நீ
சொல்லாமல்
விட்ட
ஒரு
செய்தியை.

*************************

கைமறதியாய்
வைத்த
மூக்குக்
கண்ணாடியைத்
தேடும்
முதியவரைப்
போல்
உள்ளுக்குள்
அலைகிறது
ஒரு
கவிதை.

************************

பாலத்தினடியில்
தவித்து
நிற்கும்
நதியின்
விசும்பலில்
உறைகிறது
ஒரு
வரலாற்றுத்
துக்கம்.

************************

சாணை
தீட்டி
தீட்டி
நீ
பிரயோகித்த
வார்த்தைதகளால்
தாக்குண்டு
வீழ்கிறது
நமக்கான
சம்பாஷணை.

வியாழன், 17 ஜூன், 2010

கொஞ்சம் கவிதைகள்

வனம் புகும்
ஆசைக்கான
திரி தூண்டல்
ஓர் ஓக் மரத்தின்
காற்றுக்கான
எதிர்வினையின்
போது
நிகழ்ந்திருக்கலாம்.

*********************

பூனை
தடம் பதிக்கும்
மெல்லொலி
கேட்டு
கண்
விழிக்கிறதென் கனவு.

**********************

தயவு செய்து
நிறுத்துங்கள்
நிரம்பி
வழிகிறதென்
கோப்பை.

திங்கள், 14 ஜூன், 2010

கதம்பம்

சமீபத்தில் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம்
தகர்க்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல்
மற்றும் யூகங்களை சற்று ஒதுக்கி விட்டு உடனடியாக
நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது.
சேலம்-சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் Guard
திரு.ராஜசேகரனுக்கு நம் நன்றிகளையும்
பாராட்டுதல்களையும் தெரிவிப்போம்.
அவரது மதியூக செயல்பாட்டினால் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் உயிர் பிழைத்தனர்.
தவறுகளையே சுட்டிக் காட்டும் ஊடகங்கள்
தவறுகளைத் தடுப்பவர்களை முன்னிலைப்
படுத்த வேண்டும்.
************************************

மூன்று நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில்
தற்காலிக ஊழியராக வேலை பார்த்த ரஜினி
என்ற இளைஞன் இரு சக்கர வாகன விபத்தில்
உயிரிழந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன்
எதிர்படும் அந்த இளைஞரின் வண்ன மயமானக்
கனவுகள் அனைத்தும் ஒற்றை நொடியில்
முரட்டு சக்கரங்களுக்கிடையே சிதைந்து போயின.
யோசித்து பார்க்கும் போது நகரத்துக்கு வெளியேதான்
நிறைய இரு சக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன.
கையில் வண்டி இருக்கு. பஸ் பிடித்துப் போக
வேண்டிய தேவையில்லை என்ற பொது புத்தியைத்
தள்ளி வைத்து விட்டு நகரத்துக்குள்ளாக மட்டுமே
ஓட்டினால் ஓரளவுக்கு விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
*****************************************************

திரு.கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் என்னும்
விமானக் கம்பெனியை வாங்கியுள்ளதாக தகவல்
வந்துள்ளது. ஆயிரத்து இரு நூற்று இருபது கோடி
ரூபாய் கொடுத்துள்ளதாகவும். சன் டிவி சீரியல்களைப்
பார்த்து நம் மக்கள் சிந்திய கண்ணிர்த்துளிகள்
பெரு வெள்ளமாய் பெருகியுள்ளதற்கு இதைவிட
பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
******************************************************

அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியத்
தேர்தலில் ஓட்டு அளிப்பதற்கான உரிமை
அளிப்பதற்கான முயற்சி இறுதி வடிவத்தை
அடைந்துள்ளது. ஓட்டு போடாமல் சித்தாந்தம் பேசும்
உள்நாட்டு இந்தியர்கள் முகத்தில் அயல் தேச இந்தியர்கள்
கரி பூசுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

எசப்பாட்டு

படுகொலை
செய்யப்பட்ட
மரங்களின்
சமாதிகளின்
மீதேறி
புகை கக்கி
விரையும்
நம்மையும்
மன்னிக்கிறது
இயற்கையின்
பெருங்கருணை.

நதியெனப்படுவது
குடிக்க
குளிக்க
பயிர் செழிக்க
என்பது மருவி
கழிவுநீர்
கலக்க
என்பதாய்..

கடலிலிருந்து
மீனவனை
விரட்ட
ஒரு திட்டம்.
மலையிலிருந்து
பழங்குடியினனை
விரட்ட
ஒரு திட்டம்.
அரசு
ஐந்தாண்டு
திட்டமிடட்டும்.
நாம்
மாறுதலுக்கு
அம்பானியை
பிரதமராகவும்
டாட்டாவை
ஜனாதிபதியாகவும்
ஆக்கி
அழகுபார்க்க
திட்டமிடுவோம்
அரசு சார்பில்.

சிகப்பு
வெள்ளை
பச்சை
கருப்பு
மஞ்சள்
காவி
நீலம்
கட்சிக்
கொடிகள்
தீற்றிக்
கொண்டபின்
எல்லா
வர்ணங்களும்
ஒன்றுதானோ?

திங்கள், 7 ஜூன், 2010

முகத்தில் அடித்த அறை


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:
-----------------------------------
படத்தில் உள்ள நபர் பெயர் : வாரன் ஆண்டர்சன்
முந்தைய தொழில் : சேர்மன்,யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்

கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கீழ்கண்ட பரிசுகள்
கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று நம்பப் படுகிறது:

1. நூறு கசையடி
2. தேசிய விரோதி பட்டம்
3. இந்திய குடிமை உரிமப் பறிப்பு

மிக நீண்ட 26 வருடங்களுக்குப் பிறகு போபால் விஷ வாயு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
இரண்டு வருட சிறை.
ரூபாய் 25000 செலுத்தி ஜாமீனில் விடுதலை.

குறந்த பட்சம் 15000 உயிர்கள் பலி.
லட்சக்கணக்கில் பாதிக்கப் பட்டோர்.
தலைமுறையாய் தொடரும் பாதிப்பு.

இதற்கான விலை இதுதான்.

இந்தத் தீர்ப்பு நீதி துறையின் முகத்தில் அடிக்கப்பட்ட அறை என்று இந்திய தேசிய மாதர்
சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முகத்தில் விழுந்த அறை மட்டுமல்ல.
இதயத்தில் விழுந்த கத்திக் குத்து.

பின் குறிப்பு :
கோபத்திலோ அல்லது தற்காப்புக்காகவோ ஒரு ஆளைக் கொன்றால்
அதற்கான தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது மரண
தண்டனையாகவோ இருக்கலா.

அக்கறையின்மையால் லட்சக் கணக்கில் ஆட்கள் கொல்லப்பட்டாலும்
அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்ண்டு ஆண்டுகள் தண்டனை
மற்றும் அபராதம்.

பாரத தேசம் என்று கும்மியடி.