செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பிரிய ரெஜி டீச்சர்

ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது

3 கருத்துகள்:

சுசி சொன்னது…

அருமையா இருக்கு..

கனமாகவும்..

கயல் சொன்னது…

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன். சிறப்பிக்கவும்.
http://kayalsm.blogspot.com/2010/08/blog-post.html

பத்மா சொன்னது…

அருமை மதுமிதா