வெள்ளி, 31 டிசம்பர், 2010
நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது.
சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக.
தாமதமாக கொடுத்தாலும் தகுதியானவருக்கே.
இவரது எழுத்துக்களில் அடிநாதமாய் ஒரு
நகைச்சுவை ஓடிக்கொண்டிருக்கும்.
இவரது எழுத்துக்களின் காதலன் நான்.
டாக்டர் பினாயக் சென்னுக்கு ராய்பூர் நீதிமன்றம்
ஆய்ள்தண்டனை விதித்திருக்கிறது. ஒரு
போலியான குற்றச்சாட்டை சொல்லி.
நக்ஸல் தீவிரவாதிகளுக்கு கடித பரிவர்த்தனை
செய்து கொடுத்ததாய். முன்பு டாக்டர் சென், வேலூர்
சிஎம்சியில் பணியாற்றியவர். இவர் செய்த
ஒரே குற்றம் அரசாங்கத்தின் வெளிச்சம்
விழாத மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்
மருத்துவ உதவி செய்தது மட்டும் தான்.
போனி எம் ஐ இன்னமும் ஞாபகம் வைத்திருப்பவர்கள்
பாடகர் பாபி ஃபாரெல்லை மறக்க முடியாது.
டாடி கூல் மற்றும் ரிவர்ஸ் ஆஃப் தி பாபிலோன்
இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
பாபி நேற்று மறைந்துவிட்டார்.
அவர் குரல் என்றும் நிற்கும்.
வெள்ளி, 17 டிசம்பர், 2010
கானல் வரி
கலைவாணி என்ற தமிழ்நதி,அநேக
ஈழத்தமிழர்களைப் போல் போரினால்
கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.
கனடாவில் வாழ்ந்த காலத்தில்
கலைவாணி இராஜகுமாரன் என்ற
பெயரில் சிறுகவிதைகள்,கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய
தளங்களில் இயங்கியவர்.
இவரின் “கானல் வரி “
மரபை மீறிய காதலின் இனிப்பையும்,
கசப்பையும் சொல்லும் பெருங்கதை
அல்லது குறு நாவல்.
இந்த “மரபை மீறிய” என்ற சொற்றொடர்
பழக்க தோஷத்தில் வந்து விழுந்து
விடுகிறது.
மாதவி என்பவர் மெளலி என்பவருக்கு
எழுதிய 60 பக்கக் கடிதமே கதை.
சமுதாயத்தால் அங்கீகரிக்கப் படாத
காதலைப் பற்றி எழுதுகிறார்.
சமுதாயத்தின் அங்கீகாரத்தை
எதிர்பார்க்காமல் எத்தனையோ
செயல்கள் தன்னிச்சையாக
நிகழ்ந்து விடுகின்றன.
அதில் இவர்களின் காதலும் ஒன்று.
இவர்களின் கதையில்
பாண்டிச்சேரி ஒரு கதாபாத்திரமாகவே
வருகிறது பாண்டிச்சேரிக்கே உரிய
அத்தனை மேன்மைகளுடனும்.
தமிழ்நதியின் எழுத்து கவிதையை
சிந்திக் கொண்டே போகிறது
செல்லும் தடமெல்லாம்.
“.... எழுத்தும்,முயக்கமும்
ஒன்றுதான். இரண்டின் முடிவிலும்
கண்சொருகும் கிறக்கமே எஞ்சுகிறது.
அமானுஷ்ய வெளியில் புகையினைப்
போல் எடையற்று மிதந்த
பரவசத்தை எத்தனை தடவை நீ
சொல்லக் கேட்டிருந்தேன்.
உடல் என்பது அற்புதங்களின்
பேழை. அதைப் பொருத்தும்
திறவுகோலால் திறக்க முடியவில்லை
எனில் இந்த வாழ்வு முற்றிலும் பாழ்.
மலையுச்சியில் மனிதக் கால்கள்
இலகுவில் சென்றடைய முடியாத
உயரத்தில் பாழடைந்து கிடந்த
கோவிலைக் கண்டுபிடித்து கண்ணீர்
வழியப் பூசிப்பது போல, நான்
தொலைத்த என்னுடலை மீண்டும்
கண்டுபிடித்துக் கொடுத்தவன்
நீதான்....”
இதனையே பிரபஞ்சன் தன் முன்னுரையில்
குறிப்பிடுகிறர்.
இணையம்,இலக்கியம் வழி சென்று
காதலாகி காமத்தினூடே
பிரிதலின் வலியை மிக
அழுத்தமாகவேச் சொல்லும்
படைப்பு இது.
வாழ்வு கை விடும்போது மரணம்
எத்தனை அழகானதாகிவிடுகிறது
என்பதனை நான் கண்டேன். மரணத்தின்
மஞ்சள் பூக்கள் தலயசைத்து என்னைக்
கூப்பிட்டன. தானாகச் சாவு வந்து
என்னைச் சேரும் வரை வாழ்ந்தே
கடக்க வேண்டிய நாட்களின் நீளம்
மூச்சு முட்டியது.
மிக வலிமையான வரிகள்.
கானல் வரி பற்றிச் சொல்ல
நிறைய விஷயங்கள் உண்டு.
இது ஒரு உயிர்மை வெளியீடு.
வியாழன், 16 டிசம்பர், 2010
ரத்த சரித்திரம்
முகத்தில் ரத்தம் தெறிக்கும் படம்.
மற்றுமொரு ராம்கோபால் வர்மா படம்.
முதல் படம் ஷிவாவில் கலக்கியது போல்
இதிலும்.
ஆந்திரா அரசியலில் எவ்வளவு ரத்தம்
கலந்துள்ளது என்பதை வெளிப்படுத்திய
படம். மிக வன்முறைப் படம் என்று
எல்லோராலும் முத்திரைக் குத்தப்பட்டாலும்
உண்மைக் கதை இதைவிட பலமடங்கு
ரத்தக் கறை படிந்தது.
பரிதலா ரவி என்பவரின் கதையை
காங்கிரஸ்,தெலுங்கு தேசம் கட்சிகள்
எப்படி புனைந்தன என்பதைப்
பார்க்கும் போது படம் உண்மைக்குத்
துரோகம் செய்யவில்லை என்றே
படுகிறது.
விவேக் ஓபராய் மிக நேர்த்தியாகச்
செய்துள்ளார்.
சாக்லேட் பையன் சூர்யா இன்னும்
போக வேண்டிய தூரம் இருக்கிறது.
அவர் இன்னமும் உக்கிரம்
பழகவில்லை.
ஓபராயின் மனைவியாக வரும்
ராதிகா ஆப்தே நடிப்பில்
மட்டுமல்ல அழகிலும் வசீகரிக்கிறார்.
திங்கள், 13 டிசம்பர், 2010
அழுகல்
உ.பி. மாநிலத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான
நிலத்தை சர்க்கஸ் கம்பெனிக்கு தற்காலிகமாக
வாடகைக்கு விடுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம்
உத்திரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து வக்பு வாரியம்
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வக்பு வாரிய நிலத்தை
சர்க்கஸ் கம்பெனிக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக
அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
ரத்து செய்தது. அத்துடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்
அழுகிப் போன விஷயங்கள் நடப்பதாகவும் அதனை
சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும்
குறிப்பிட்டனர். அழுகிப் போன என்ற கருத்தை நீக்க
வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பாக
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய
வார்த்தையை திரும்ப பெற மறுத்துவிட்டது.
நிற்க.
இதற்கு முன்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில்
ஒருதலை பட்சமாக இதே அலகாபாத் நீதிமன்றம்
தீர்ப்பளித்தத்தையும் கவனத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திடம் கேட்பதற்கு ஒரு கேள்வி
உண்டு.
அழுகிப்போன விஷயங்கள் நடப்பது நீதிமன்றத்தில்
மட்டும்தானா?
திங்கள், 6 டிசம்பர், 2010
THE SONG OF SPARROWS
இரானிய இயக்குனர் மஜீத் மஜீதியின் மற்றுமொரு
அற்புதமான படம். நெருப்புக் கோழிப் பண்ணையில்
வேலை பார்க்கும் ஒரு கிராமத்து மனிதன் நகரத்திற்கு
வந்த பின் எவ்விதம் மாறுகிறான் என்பதைச் சொல்லும்
படம். கிட்டதட்ட இவரின் எல்லாப் படத்திலும்
குழந்தைகள் பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள்.
நான் ரசித்த இரண்டு விஷயங்கள்.
தந்தை வேலை முடிந்து வந்ததும் ஓடிச் சென்று
குழந்தைகள் எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள்
என்று ஆவலாய்க் கேட்கும் இடம்.
வாகனங்கள் விரையும் சாலையில் குழந்தைகள்
பூங்கொத்து விற்கும் இடம்.
மற்றும் பல விஷயங்கள் இந்தியச் சூழலைப்
பிரதிபலிக்கின்றன.
இவரின் " children of Heaven " திரையில்
ஒளிரும் ஒரு சொர்க்கம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)