வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானல் வரிகலைவாணி என்ற தமிழ்நதி,அநேக
ஈழத்தமிழர்களைப் போல் போரினால்
கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.
கனடாவில் வாழ்ந்த காலத்தில்
கலைவாணி இராஜகுமாரன் என்ற
பெயரில் சிறுகவிதைகள்,கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய
தளங்களில் இயங்கியவர்.
இவரின் “கானல் வரி “
மரபை மீறிய காதலின் இனிப்பையும்,
கசப்பையும் சொல்லும் பெருங்கதை
அல்லது குறு நாவல்.
இந்த “மரபை மீறிய” என்ற சொற்றொடர்
பழக்க தோஷத்தில் வந்து விழுந்து
விடுகிறது.
மாதவி என்பவர் மெளலி என்பவருக்கு
எழுதிய 60 பக்கக் கடிதமே கதை.
சமுதாயத்தால் அங்கீகரிக்கப் படாத
காதலைப் பற்றி எழுதுகிறார்.
சமுதாயத்தின் அங்கீகாரத்தை
எதிர்பார்க்காமல் எத்தனையோ
செயல்கள் தன்னிச்சையாக
நிகழ்ந்து விடுகின்றன.
அதில் இவர்களின் காதலும் ஒன்று.
இவர்களின் கதையில்
பாண்டிச்சேரி ஒரு கதாபாத்திரமாகவே
வருகிறது பாண்டிச்சேரிக்கே உரிய
அத்தனை மேன்மைகளுடனும்.
தமிழ்நதியின் எழுத்து கவிதையை
சிந்திக் கொண்டே போகிறது
செல்லும் தடமெல்லாம்.
“.... எழுத்தும்,முயக்கமும்
ஒன்றுதான். இரண்டின் முடிவிலும்
கண்சொருகும் கிறக்கமே எஞ்சுகிறது.
அமானுஷ்ய வெளியில் புகையினைப்
போல் எடையற்று மிதந்த
பரவசத்தை எத்தனை தடவை நீ
சொல்லக் கேட்டிருந்தேன்.
உடல் என்பது அற்புதங்களின்
பேழை. அதைப் பொருத்தும்
திறவுகோலால் திறக்க முடியவில்லை
எனில் இந்த வாழ்வு முற்றிலும் பாழ்.
மலையுச்சியில் மனிதக் கால்கள்
இலகுவில் சென்றடைய முடியாத
உயரத்தில் பாழடைந்து கிடந்த
கோவிலைக் கண்டுபிடித்து கண்ணீர்
வழியப் பூசிப்பது போல, நான்
தொலைத்த என்னுடலை மீண்டும்
கண்டுபிடித்துக் கொடுத்தவன்
நீதான்....”
இதனையே பிரபஞ்சன் தன் முன்னுரையில்
குறிப்பிடுகிறர்.
இணையம்,இலக்கியம் வழி சென்று
காதலாகி காமத்தினூடே
பிரிதலின் வலியை மிக
அழுத்தமாகவேச் சொல்லும்
படைப்பு இது.
வாழ்வு கை விடும்போது மரணம்
எத்தனை அழகானதாகிவிடுகிறது
என்பதனை நான் கண்டேன். மரணத்தின்
மஞ்சள் பூக்கள் தலயசைத்து என்னைக்
கூப்பிட்டன. தானாகச் சாவு வந்து
என்னைச் சேரும் வரை வாழ்ந்தே
கடக்க வேண்டிய நாட்களின் நீளம்
மூச்சு முட்டியது.
மிக வலிமையான வரிகள்.
கானல் வரி பற்றிச் சொல்ல
நிறைய விஷயங்கள் உண்டு.

இது ஒரு உயிர்மை வெளியீடு.

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

//வாழ்வு கை விடும்போது மரணம்
எத்தனை அழகானதாகிவிடுகிறது
என்பதனை நான் கண்டேன். மரணத்தின்
மஞ்சள் பூக்கள் தலயசைத்து என்னைக்
கூப்பிட்டன. தானாகச் சாவு வந்து
என்னைச் சேரும் வரை வாழ்ந்தே
கடக்க வேண்டிய நாட்களின் நீளம்
மூச்சு முட்டியது.//
அழுத்தமான வரிகள். நல்ல அறிமுகம்.

சிவகுமாரன் சொன்னது…

நல்ல அறிமுகம் .
ஆண்டாள் திருப்பாவை நினைவுக்கு வருகிறது.

சுசி சொன்னது…

நல்ல விமர்சனம் மதுமிதா.

சுந்தர்ஜி சொன்னது…

//எழுத்தும்,முயக்கமும்
ஒன்றுதான். இரண்டின் முடிவிலும்
கண்சொருகும் கிறக்கமே எஞ்சுகிறது.
அமானுஷ்ய வெளியில் புகையினைப்
போல் எடையற்று மிதந்த
பரவசத்தை எத்தனை தடவை நீ
சொல்லக் கேட்டிருந்தேன்.
உடல் என்பது அற்புதங்களின்
பேழை. அதைப் பொருத்தும்
திறவுகோலால் திறக்க முடியவில்லை
எனில் இந்த வாழ்வு முற்றிலும் பாழ்.
மலையுச்சியில் மனிதக் கால்கள்
இலகுவில் சென்றடைய முடியாத
உயரத்தில் பாழடைந்து கிடந்த
கோவிலைக் கண்டுபிடித்து கண்ணீர்
வழியப் பூசிப்பது போல, நான்
தொலைத்த என்னுடலை மீண்டும்
கண்டுபிடித்துக் கொடுத்தவன்
நீதான்....”//

எழுத்தையும் உடலையும் உணர்ந்தவனின் மொழி இப்படித்தான் இருக்கும்.

உங்களின் தேடுதலாலும் பரவலான கழுகுப் பார்வையாலும் நாங்களும் இரை தேடிக் கொள்கிறோம் மதுமிதா.

சி. கருணாகரசு சொன்னது…

அறிந்தவர்.... பற்றிய அறிமுகம்!
அருமை நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்!!