திங்கள், 12 ஜூலை, 2010

குழந்தைகள் வாழ்க



நண்பர் அஹமத் இர்ஷாத் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.
உபரியாய் ஒரு சுதந்திரமும் கொடுத்திருந்தார். எந்த தலைப்பில் வேண்டுமானாலும்
எழுதலாம். நன்றி இர்ஷாத்.
என்னை மிக மிக கவர்ந்த ஒரு புத்தகம்.
"குழந்தைகள் வாழ்க".
இது ஒரு மாஸ்கோ பதிப்பக நூல்.
ஷ.அமனஷ்வீலி எழுதியது.
அமனஷ்வீலி சோவியத் விஞ்ஞானி,மனோதத்துவ டாக்டர்,பேராசிரியர்.
முதன் முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரும்
முறைகளையும்,வழிகளையும் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூலில் வரும் முதல் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் சேர வரும் குழந்தைகளுக்கு
பள்ளி திறக்கும் முன்பாகவே அவர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதுகிறார் வாழ்த்து
அட்டையுடன்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அக் குழந்தைகளின் பெயர்,அவ்ர்களின்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு
இது மாதிரியான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விடுகிறார்.
முதல் நாள் ஒவ்வொரு குழந்தையின் பெயர் சொல்லி அழைத்து
பரிசு பொருட்கள் வழங்குகிறார்.
அட்டைகள்,படங்கள்,சின்னச் சின்ன பொருட்கள் இவைகள் தான்
பாடத்தின் கரு.
குழந்தைகள் பாடுகின்றன.. ஆடுகின்றன.. விளையாடுகின்றன..
வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலிருந்தும் ஒருவர்
விருந்தினராக அழைக்கப் படுகிறார். ஒரு விருந்தினர் கதை சொல்கிறார்.
மற்றவர் பாடிக்காண்பிக்கிறார்.இன்னொருவர் மேஜிக் செய்து காட்டுகிறார்.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு புத்ததகம் தயாரிக்கிறார்கள். அவரவர்க்குப்
பிடித்த படங்களை ஒட்டி. அந்தப் புத்தகங்களை வைத்து ஒரு சின்னஞ்சிறு
நூலகம். ஒருவர் மற்றவருக்கு உதவுவது முக்கியமான பாடம்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் ஒரு பட்டியல் போடுகிறார்.

ஆசிரியரின் கட்டளைகள்,ஏவல்கள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? - கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைத் தரலாமா? - கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? - கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று
சொல்லலாமா? - கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்காரவேண்டும்
என்று சொல்லலாமா?- கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப்
பிடுங்கலாமா? - கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? - கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம்
சொல்லலாமா? - கூடாது.
இந்தக் கூடாது வகையறாக்களைத் தான் நம் பள்ளிகள்
செய்து கொண்டிருக்கின்றன.
இதை நாமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசிப்போம்.

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மது....உண்மையிலேயே யோசிக்க வைக்கிற பதிவு.படிக்க வைக்கிறோம்,கவன்மெடுக்கிறோம் என்கிற பெயரில் பெற்றவர்களும் ஆசிரியர்களும் அவர்களோடு கடுமையாகவே இருக்கிறார்கள்.
குழந்தைகளின் குணம் அறிந்து அணுகுவதே சரியாயிருக்கும்.
இல்லையென்றால் அவர்களும் எதிர்க்கிறார்கள்.

Madumitha சொன்னது…

மிகச் சரியாக சொல்லியிருக்கிறிர்கள்
ஹேமா. நன்றி.

Ahamed irshad சொன்னது…

நல்ல பதிவு.. அழைப்பை ஏற்றமைக்கு நன்றிங்க...

r.v.saravanan சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி மது

குழந்தைகளை குழந்தை மனதுடன் அணுக வேண்டும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் கிப்ட்

சுந்தர்ஜி சொன்னது…

ஒவ்வொரு விஷயமும் ஒரு காலத்துக்குப் பின் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளா விட்டால் அது ஊழலுக்கோ அடிமைத்தனத்துக்கோ அல்லது வேறேதோ ஒரு இறுக்கமான அனுபவத்துக்கோ இடம் கொடுத்துவிடும்.

கல்வியின் நிலை இதுதான்.எல்லோருக்கும் அட்டை இடப்பட்ட புத்தகங்கள்-கழுத்துப்பட்டை கால் சப்பாத்துக்களுடன் கூடிய பகட்டான சீரற்ற உடையுடன் அதிகப்படியான மதிப்பில்லாத எண்களை நோக்கிய பயணம்.

அமனஷ்வீலியின் உலகத்தை அடைவதற்குள் இன்னும் அடுத்த மூன்று தலைமுறைக்குழந்தைகளின் ஆன்மா சாந்திஅடைந்துவிடும்.

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள மதுமிதா...
தஞ்சையில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் நின்று வாசித்துவிட்டு பின் வாங்கியது குழந்தைகள் வாழ்க புத்தகம். இதனை மொழிபெயர்த்தவர் டாக்டர் இரா.பாஸ்கரன் அவர்கள் வலிமையான மொழிபெயர்ப்பால் இந்த புத்தகம் சரியான இலக்கை அடைந்துவிட்டது. அப்போதே படித்து பிரமித்த புத்தகம். உன்னுடைய பதிவு மேலும் பழையநினைவுகளைக் கிளர்ந்து பிரமிக்கவைத்துவிட்டது. நன்றி.

ரிஷபன் சொன்னது…

வாசிக்க வேண்டியதன் எண்ணிக்கை கூடுகிறது.. அறிமுகத்திற்கு நன்றி.

sryusuf சொன்னது…

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது?