செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றில் அலையும் சிறகு



புது டெல்லி,
13.04.2010.




ப்ரிய குண்டூஸ்,
ஞாபகமிருக்கிறதா?
நாம் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட நாளை.
ஸ்டீபன் சார் தான் என்னை உனக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் பார்வையிலேயே உன்னை
எனக்குப் பிடிக்கவில்லை.
அலுவலகத்தில் உள்ள எல்லாப்
பெண்களும் உன்னிடம் பேசுவதற்கு
ஆசைப்படுவார்கள்.
நானோ அதற்கு எதிர்.
தினமும் காலை எழுந்ததும்
உன் ஜோக்குக்குச் சிரிக்கக்
கூடாதென மனசுக்குக்
கட்டளையிடுவேன்.
அன்று ஒரு நாள்.
யாரோ சொன்ன செய்தி
என்னைப் புன்னகைக்க வைத்தது.
அப்போது அருகில் இருந்தாய்.
நீ சொன்னது இன்னமும்
என் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
“ ஒரு வாரம் லீவு வேணும்.
இவங்க சிரிச்சா திருப்பதில
மொட்டைப் போடுவதா
ஒரு வேண்டுதல் ”.
அவ்வளவு நாள் அடக்கி வச்சிருந்த
சிரிப்பையும் கொட்டினேன்.
நம் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப்
பத்திரிக்கை நடத்தினோமே.
அதில் ஒரு கவிதை எழுதியிருந்தாய்.

காதலைச் சொல்லும் வழி
வைரமென வைர வியாபாரிகள்
சொல்கிறார்கள்.
என் வைரத்திடம் எப்படி
வைரத்தால் சொல்வது?

யார் அந்த வைரமெனக் கேட்டேன்.
தயங்காமல் சொன்னாய்.
நான்தான் என்று.
அதன் பின் நடந்தவை எல்லாம்
கனவு போல்.
நம் திருமணத்திற்கு என் அப்பாதான்
கொஞ்சம் சங்கடம் கொடுத்தார்.
அவரையும் நீ வசீகரித்தாய்.
நம் இந்துக் குட்டிப் பிறந்த போது
என் விரல் பற்றி அழுதாயே?
அப்புறம் சூர்யாப் பயல்
பிறந்தபோது சிரித்தாய்.
எத்தனை வருஷங்கள் ஆகிப் போயின.
நம் இந்து இப்போது ஜெர்மனியில்.
சூர்யா கனடாவில்.
இருவரையும் பார்த்து
நீண்ட நாளாகி விட்டது.
உன்னிடம் எத்தனை முறைச்
சொல்லியிருக்கிறேன்.
நீ தனியாகச் சாகக்கூடாதென.
என் சொல்லை நீ கேட்கவேயில்லை.
உன் மரணத்திற்குப் பின்
இந்த முதியோர் இல்லத்தில்
தனிமைத் துயரில்
கருகிக் கொண்டிருக்கிறேன்.
ப்ளீஸ்டா.
என்னைக் காப்பாற்று.

மாறாக் காதலுடன்,
உன் ஒல்லிப்பிச்சி.

3 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தர்ஜி சொன்னது…

குண்டூஸுக்கு ஒல்லிப்பிச்சுவின் கடிதம் என் நண்பனின் மனைவியின் அகால மரணத்தையும் தொடர்பற்ற அவன் குழந்தைகளையும் பகிர்வதற்கு யாருமற்ற அவன் தனிமையையும் சொன்னது.நெகிழ்வூட்டும் பதிவு.

Unknown சொன்னது…

hm nice one