சனி, 24 ஏப்ரல், 2010

விடுமுறை விண்ணப்பம்


அனுப்புநர்
இரா.தனலெட்சுமி
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

பெறுநர்
உயர்திரு ஆசிரியர் அவர்கள்
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : விடுமுறை வேண்டி
*********
கடந்த திங்கள் இரவு என்னுடைய அக்கா அபி என்கிற அபிதகுசலாம்பாள்
உடம்பில் தீ வைத்துக்கொண்டு இறந்து போனாள். குளியலறை
சுவர்களில் இன்னும் அக்காவின் மிச்சமிருக்கிறது. அம்மா மயக்க நிலை
நீங்காமல் கிடக்கிறாள். அப்பா கோபம் துறந்து கதறிக் கொண்டிருக்கிறார்.
தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அக்காவின் குழந்தை.
எப்போதும் அக்காவின் விரல் நுனி பற்றிக்கொண்டேத் திரிவான்.
அம்மாச்சி அடிக்கடி சொல்லும். அடியே இவளே நீ கல்யாணம் கட்டிட்டுப்
போறப்ப இந்தக் கொடுக்கையும் கல்யாணச் சீராய் அழச்சிட்டுப் போய்டு.
அக்கா எங்கே என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவனுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல் எல்லாரும் அழுதுகொண்டிருக்கிறோம்.

சார், எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவரை அக்கா நேசித்திருக்கிறாள்.
அக்கா அம்மாவிடம் சொல்லிருக்கு. அம்மா அப்பாவிடம் சொல்ல
அப்பா அக்காவை அடித்துவிட்டார். அக்கா அப்பாச் செல்லம். அக்கா
பிறந்த பிறகுதான் அப்பாவின் பிசினெஸ் சூடு பிடித்ததாம். அப்பா எங்க
ஊரில் சின்னதா ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். அங்கே சாப்பிட
வந்தபோதுதான் அக்கா நேசித்தவருடன் அப்பாவுக்கு முதல் பழக்கம்.
அவர் எங்களூர் பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த வாத்தியார். அவர்
எல்லோருடனும் சிரித்து சிரித்துப் பழகுவார். அந்த்ச் சிரிப்புதான்
அக்காவை வசீகரித்திருக்க வேண்டும். சார், பெரிய மனுஷி மாதிரி
எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம். எனக்கும் பதினைஞ்சு
வயசு ஆய்டுச்சு.

எங்க அத்தைப் பையனைத்தான் அக்காவுக்குக் கட்டுறதாப் பேச்சு.
அதான் அப்பா ஒத்துக்கலை. எங்க அத்தைப் பையன் கூட வந்துப்
பாத்துட்டு அழுதார். அப்பாவைத் திட்டினார். என்கிட்டே சொல்லிருந்தா
நானே அபிக்கு அந்த ஆளைக் கல்யாணம் பண்ணி வெச்சிருந்த்ருப்பேன்னு
புலம்பிக்கிட்டே இருந்தார். எங்க அத்தான் எவ்வளோ நல்ல மனுஷன்
பாருங்க. அக்கா அத்தானுக்கும் இல்லாமே வாத்தியாருக்கும் இல்லாமே
போய்ச்சேர்ந்துட்டா.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
இது உங்களுக்குத் தெரியாதா சார். எங்க அக்காவை இப்படி அநியாயமாய்க்
கொன்னுட்டீங்களே சார். அக்கா லெட்டர் எழுதி வச்சிருகுது சார்.
உங்களை ஒன்னும் பண்ணிடக் கூடாதென்று. அதனால் தான் நீங்கள்
இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிறீர்கள் சார். தயவு செய்து வேற ஊருக்கு
மாற்றல் வாங்கிட்டுப் போய்டுங்க. அங்கே போய் இதே மாதிரி எதுவும்
பண்ணிடாதீங்க.

அக்கா வச்ச மருதாணிச் செடியும்,செம்பருத்திச் செடியும்
காஞ்சிப் போய்டுச்சி எங்கக் குடும்பம் மாதிரியே.இந்த்ச் சூழலில்
என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை. எனவே எனக்கு
பத்து நாட்கள் விடுப்புத் தருமாறு தங்களை மிகப்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,

இரா.தனலெட்சுமி.

4 கருத்துகள்:

நந்தா சொன்னது…

கதை சொல்லிய கவிதை ... அருமை

ஹேமா சொன்னது…

கவிதையா கதையா மது !

சொல்ல வார்த்தைகள் வந்து அமுங்கிப்போகிறது !

ஹரணி சொன்னது…

யேய்..நீ கோபித்துகொண்டாலும் பரவாயில்லை..உண்மையிலே மனதை இளக்கி கண்ணீர் வரவழைத்த கதைடா..ரொம்ப அற்புதமான எதார்த்தமான வலிமிகுந்த வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைடா..கணத்துப்போகிறேன். உன் எழுத்தின் வலிமை நினைத்து பெருமைப்படுகிறேனடா... உறரணி.

siva சொன்னது…

hm great..