வெள்ளி, 30 ஏப்ரல், 2010

முன்னவர்கள்


தமிழில் எழுதுபவர்களுக்கான
ஆசான்கள் :

பாரதி
மெளனி
புதுமைப்பித்தன்
தி.ஜானகிராமன்
லா.ச.ரா
அசோகமித்ரன்
ஜெயகாந்தன்
ஆதவன்
இந்திரா பார்த்தசாரதி
சுந்தரராமசாமி
சா.கந்தசாமி
வண்ணநிலவன்
வண்ணதாசன்
நாஞ்சில்நாடன்
அம்பை
சுஜாதா
தஞ்சை ப்ரகாஷ்
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஷ்ணன்
சாருநிவேதிதா
கிருஷ்ணா டாவின்சி
இரா.முருகன்

வியாழன், 29 ஏப்ரல், 2010

பறக்கும் வானவில்


பட்டாம் பூச்சிகளைச்
சேகரிப்பவனின்
குறிப்பு நோட்டில்
வந்தமர்ந்த
பட்டாம் பூச்சிக்குத்
தெரிந்திருக்கக்
கூடுமோ
அதற்கு
வழங்கப்பட்ட
சுதந்திரத்தின்
மகத்துவம்.

சிக்னல்


சிகப்பு
நில்.
மஞ்சள்
கவனி.
பச்சை
செல்.
மூன்று
வண்ணங்களுக்குள்
அடங்க மறுத்து
அடம்
பிடிக்கிறது
இந்த
வாழ்க்கை.

அடங்க மறு


மூங்கில் புதர்களைச்
சிதைத்தும்
பெருங்கிளைகளை
முறித்தும்
திரிந்த
தன்
மூதாதையரின்
ஆக்ரோஷம்
மறந்து
சில்லறைக்காய்
முதுகு
வளையும்
கோயில் யானையின்
சுதந்திரம்
ஒற்றைச் சாவியிலா?


மீதமிருக்கிற


கம்பிகளுக்குள்
சிறைப்பட்ட
மிருகத்தின்
கண்களில்
மீதமிருக்கிறது.
பச்சை இருள்
படர்ந்த
வனத்தின்
புதர்ச்சரிவில்
ஒளிரும்
ரெளத்ரம்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

பின் யோசனை


என்
அருகாமையில்
வரும்போது
மடியில்
வெடியைப்
பொருத்திக்
கொண்டவளைப்
போல்
பதட்டமடைகிறாய்
பெண்ணே.
முன்னரே
தெரிந்திருந்தால்
கொஞ்சம்
தள்ளிப்
போட்டிருக்கலாம்
பயமற்றக்
காதல்
இங்கே
சாத்யமாகும்வரை.

நின்னை எதிர் நோக்கி


தாயே
எம் பள்ளிகளுக்கு
என்று
விஜயம்
செய்வதாய்
உத்தேசம்?
எம்
குழந்தைகள்
காத்திருக்கின்றனர்
முதுகில்
மூட்டையைச்
சுமந்தபடி.

சொல்லப்படாத செய்தி


நதிக்கரையில்
தூண்டில்
வீசிக்
காத்திருக்கும்
மீன்காரரின்
செய்தியை
யார்
கொண்டுபோய்ச்
சேர்ப்பார்
நம்
கவிகளிடம்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கருணை மிகு



பூமியை
நிராகரித்த
தொட்டிச்செடிக்கும்
மறக்காமல்
நீர்
ஊற்றிப் போகும்
மழை.

சனி, 24 ஏப்ரல், 2010

கேள்விகளை முன் வைத்து ஒரு கேள்வி


பலூன்கள்
உடைபடுவதில்
உடன்பாடுடைய
ஒரு
குழந்தையையேனும்
எவராவது
சுட்டிக் காட்டுதல்
சாத்தியமா?

கேள்விகளுக்காய்
தவழ்ந்து
செல்ல முடிவதில்லை
பதில்களின்
குகைக்குள்.

கேள்வி
தவிர்த்து
நடந்தால்
தட்டுப்படக்
கூடுமோ
பதில்கள்?

கனவு நோக்கியப் பயணம்



இரவு
தீர்ந்துக் கொண்டே
இருக்கிறது.

உறக்கம்
பூனை போல்
மென் நடையில்
வருவதற்கான
எதிபார்ப்புக்
கூடிக்கொண்டே
போகிறது.

என்ன செய்வது?
உறக்கத்தின்
வழிதான்
கனவுகளைக்
கண்டடைய
வேண்டியிருக்கிறது.

விடுமுறை விண்ணப்பம்


அனுப்புநர்
இரா.தனலெட்சுமி
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

பெறுநர்
உயர்திரு ஆசிரியர் அவர்கள்
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு
அ.மே.நி.பள்ளி
தேரூர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : விடுமுறை வேண்டி
*********
கடந்த திங்கள் இரவு என்னுடைய அக்கா அபி என்கிற அபிதகுசலாம்பாள்
உடம்பில் தீ வைத்துக்கொண்டு இறந்து போனாள். குளியலறை
சுவர்களில் இன்னும் அக்காவின் மிச்சமிருக்கிறது. அம்மா மயக்க நிலை
நீங்காமல் கிடக்கிறாள். அப்பா கோபம் துறந்து கதறிக் கொண்டிருக்கிறார்.
தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அக்காவின் குழந்தை.
எப்போதும் அக்காவின் விரல் நுனி பற்றிக்கொண்டேத் திரிவான்.
அம்மாச்சி அடிக்கடி சொல்லும். அடியே இவளே நீ கல்யாணம் கட்டிட்டுப்
போறப்ப இந்தக் கொடுக்கையும் கல்யாணச் சீராய் அழச்சிட்டுப் போய்டு.
அக்கா எங்கே என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறான். அவனுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல் எல்லாரும் அழுதுகொண்டிருக்கிறோம்.

சார், எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவரை அக்கா நேசித்திருக்கிறாள்.
அக்கா அம்மாவிடம் சொல்லிருக்கு. அம்மா அப்பாவிடம் சொல்ல
அப்பா அக்காவை அடித்துவிட்டார். அக்கா அப்பாச் செல்லம். அக்கா
பிறந்த பிறகுதான் அப்பாவின் பிசினெஸ் சூடு பிடித்ததாம். அப்பா எங்க
ஊரில் சின்னதா ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். அங்கே சாப்பிட
வந்தபோதுதான் அக்கா நேசித்தவருடன் அப்பாவுக்கு முதல் பழக்கம்.
அவர் எங்களூர் பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த வாத்தியார். அவர்
எல்லோருடனும் சிரித்து சிரித்துப் பழகுவார். அந்த்ச் சிரிப்புதான்
அக்காவை வசீகரித்திருக்க வேண்டும். சார், பெரிய மனுஷி மாதிரி
எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம். எனக்கும் பதினைஞ்சு
வயசு ஆய்டுச்சு.

எங்க அத்தைப் பையனைத்தான் அக்காவுக்குக் கட்டுறதாப் பேச்சு.
அதான் அப்பா ஒத்துக்கலை. எங்க அத்தைப் பையன் கூட வந்துப்
பாத்துட்டு அழுதார். அப்பாவைத் திட்டினார். என்கிட்டே சொல்லிருந்தா
நானே அபிக்கு அந்த ஆளைக் கல்யாணம் பண்ணி வெச்சிருந்த்ருப்பேன்னு
புலம்பிக்கிட்டே இருந்தார். எங்க அத்தான் எவ்வளோ நல்ல மனுஷன்
பாருங்க. அக்கா அத்தானுக்கும் இல்லாமே வாத்தியாருக்கும் இல்லாமே
போய்ச்சேர்ந்துட்டா.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
இது உங்களுக்குத் தெரியாதா சார். எங்க அக்காவை இப்படி அநியாயமாய்க்
கொன்னுட்டீங்களே சார். அக்கா லெட்டர் எழுதி வச்சிருகுது சார்.
உங்களை ஒன்னும் பண்ணிடக் கூடாதென்று. அதனால் தான் நீங்கள்
இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிறீர்கள் சார். தயவு செய்து வேற ஊருக்கு
மாற்றல் வாங்கிட்டுப் போய்டுங்க. அங்கே போய் இதே மாதிரி எதுவும்
பண்ணிடாதீங்க.

அக்கா வச்ச மருதாணிச் செடியும்,செம்பருத்திச் செடியும்
காஞ்சிப் போய்டுச்சி எங்கக் குடும்பம் மாதிரியே.இந்த்ச் சூழலில்
என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை. எனவே எனக்கு
பத்து நாட்கள் விடுப்புத் தருமாறு தங்களை மிகப்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,

இரா.தனலெட்சுமி.

லெமன் ட்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்


நண்பர் கேபிள் ஷங்கரின் சிறுகதை தொகுதி
” லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்”
நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
13 சிறுகதைகள்.

எனக்குப் பிடித்த வரிசை :
1. தரிசனம்
” தேர்ந்த திரைக்கதை தான் தரிசனம் “.
மிகப் பெரிய விஷயத்தை
மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.
2. என்னை பிடிக்கலையா?
” அங்கீகாரம் தானாக் கிடைக்கணும். கேட்டு வாங்கக் கூடாது.
காதலியா இருந்தப்பக் கிடைச்ச இம்பார்டென்ஸ், மனைவியாகிவிட்ட
பிறகு எதிர்பார்க்கக் கூடாதா?”
கணவர்களுக்கான Golden Rule.
3. காமம் கொல்
” ரொம்பக் குளிராயிருக்குல்ல”
சாமியாரும் மனுஷந்தான் என்பது மீண்டும் மீண்டும்
நிரூபணமாகிறது.
4. நண்டு
“.........” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டைக் கட்டியிருந்தது.
கதை ஒரே நேரத்தில் மகேந்திரனையும்,சுஜாதாவையும் ஞாபகப்
படுத்தியது.
5. ஒரு காதல் கதை.. இரண்டு க்ளைமாக்ஸ்
இரண்டும் எதிர்பாராத twist.
6. முத்தம்
அவள் முத்தமிட்ட உதடுகளில் வலித்தது
மனசும் வலித்தது..
7. கல்யாணம்
இது கூட ஒரு வலியைச் சொன்ன கதைதான்
8. ராமி,சம்பத்,துப்பாக்கி
“ டுமீல்” என்று லைட்டர் வெடித்தது.
செம விறு விறுப்பு.
9. லெமன் ட்ரீயும்,இரண்டு ஷாட் டக்கீலாவும்
“யாது ஊரே யாவரும் கேளீர் “ ஆசாமிக்கு 70 வயசா?
வித்யாசமான கதை.
10.ஆண்டாள்
11. மாம்பழ வாசனை
12. போஸ்டர்
13. துரை..நான்..ரமேஷ் சார்
கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னும் நல்லாச் செய்திருக்கலாம்.
அட்டைப் படம் மிக அருமை. அச்சு அமைப்பும் மிக நன்று.

இனி எழுத வருபவர்கள் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல்
எழுத முடியாது என்பது நிஜம்தானோ? இதைப் பாராட்டாத்தான்
சொல்கிறேன்.
சங்கர் நாராயண் இணைய எழுத்தாளர்,குறும்பட இயக்குனர்,திரைகதையாசிரியர்,
நடிகர்.
இவருடையப் புத்தகத்தை வாங்க,இவரை படிக்க :

http://cablesankar.blogspot.com

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கீதமடி நீ எனக்கு








தலைமறைவாகிப்
போயின
உன்
இதழின்
இசை
கேட்டு.
கொஞ்சம்
சமாதானம்
செய்து
அழைத்து
வா
பெண்ணே.
பாடல்கள்
பிழைத்துப்
போகட்டும்.

திரு நாள்






இன்று உலகப் புத்தக தினம்.
இதை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடலாம்.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு ஆசிரியர்தானே?
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நூலகம்.
இதை நடைமுறைப் படுத்தினால்
உலகில் பல நல்ல விஷயங்கள் தானாகவே
நடக்கும். இது குறித்த சிந்தனையை
பரவலாக்கினாலே போதும்.
நம் குழந்தைகளுக்கு புத்தகங்களின்
ருசியைக் காட்டிவிட்டால்
அவர்கள் விடமாட்டார்கள்.
தொலைக் காட்சி எனும் நோய்க்கு
புத்தகங்களே சிறந்த மருந்தாகும்.

இப்போதெல்லாம்
நூலகங்களில்
காற்று மட்டும்தான்
புத்தகங்களைப்
புரட்டிக்கொண்டிருக்கிறது.

மேலேச் சொன்ன கவிதையை
மாற்றி எழுதும் பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு.

நம்மைச் சுற்றிலும்
புத்தகங்கள் இறைந்து கிடப்பது என்பது
குழந்தைகள் சூழ வாழ்வது
போன்று சந்தோஷமானது.
கடவுளின் அருகில் இருப்பது
போன்று தைரியமானது.

நம் அனைவருக்கும்
கடவுளின் அருகாமையும்
குழந்தைகளின் நட்புமான
வாழ்க்கை அமையட்டும்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

ஆதலினால் தோல்வி ஏற்பீர்


வேட்டைப்
புலியைப் போல்
துரத்தும்
உன்
நினைவுகளிலிருந்து
என்னை
விடுவித்துக் கொள்ள
எந்தக் கோப்பையிலும்
நான்
மூழ்கிவிடப் போவதில்லை.

எதிர்த்து
நின்றுப்
போரிட்டால்
எவ்வித விலங்கும்
வனம் புகும்.

இது வேட்டை
சாஸ்திரம்.

திரவமாயிருந்த
என்னைத்
திடமாய்
மாற்றிய
உனக்கு
அநேக நன்றி.

புதன், 21 ஏப்ரல், 2010

பின் தொடரும் நிஜத்தின் குரல்




யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

எந்த ப அ வெ பி பெருமாள்?

உனக்கு எத்தனை ப அ வெ பி பெருமாளைத் தெரியும்?

ஒரே ஒரு ஆள்.

அந்த ஆள் நாந்தான்னு வச்சுக்க.

சான்ஸே இல்லை.

அத விடு. நீ செய்யறது நல்லா இருக்கா?

என்ன?

உன் தொழில்?

அதுக்கென்ன?

அடப் பாவி. உயிருடன் விளையாடலாமா?

விதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக எவருக்கும்

மரணம் சாத்யமில்லை.

சாத்தான் வேதம் ஓதுகிறதா?

இல்லை. என் தொழிலை நான் செய்கிறேன்.

போலி மருந்து விற்பனை. இது ஒரு தொழிலா?

இங்கே அசல், போலி என்று எதுவுமில்லை.

மீண்டும் தத்துவமா?

அப்படித்தான் வைத்துக்கொள்.

நான் சொல்கிறேன். இப்போதாவது நிறுத்து.

முடியாது. நான் ரொம்ப தூரம் வந்து விட்டேன்.

சினிமா வசனம்.

ஆனால் உண்மை.

இதன் பின் விளைவுகளை யோசித்தாயா?

இது ஒரு தொடர் விளைவு. இதன் ஆரம்பத்தில்
உங்கள் அரசியல்வாதி பின் மருத்துவர்கள்
தொடர்ந்து மருத்துவமனைகள். நீண்டுகொண்டே
போகும்.உங்கள் உணவு,நீர்,காற்று. எல்லாமே
போலி அல்லது கலப்படம்தானே?

நியாயப்படுத்த முயற்சிக்காதே?

நியாயம் அல்லது அநியாயம் இவை ரெண்டுமே
Two sides of the coin.

உன் பெற்றோர்,உன் குழந்தைகள் இவர்களுக்கு
உன் மருந்து போய் சேர்ந்தால் என்னவாகும்?

சான்ஸே இல்லை. குப்பைத்தொட்டியில்
வீசியெறியப்பட்ட அநாதை நான். எனக்கு என்று
எவருமில்லை.

இதை இதைத்தான் நான் சொல்கிறேன். நீயே
ஒரு போலி. கலப்படம். அதனால் தான்
இத்தொழிலை தேர்ந்தெடுத்துள்ளாய்.

இல்லை.இல்லை.அப்படிச் சொல்லாதே.

அப்படித்தான் சொல்வேன்.

யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்னாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

தெரியலை.

இன்னும் தெரியலையா?

ம்ஹூம்.

நீதான் நான். நான் தான் நீ.

அய்யோ. தலை சுத்துதே.

சுத்தட்டும்.

சொல். யார் நீ?

உன் மனச்சாட்சி.

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள் கனமான
பூ ஜாடியை தூக்கி தன் முன் இருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியை
நோக்கி எறிந்தான்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

யாதுமாகி


மகத்துவமாய்
குலுங்கும்
துளசி.
சிகப்பாய்ச்
சிரிக்கும்
செம்பருத்தி.
உறங்கும் முன்
பேசிப் போகும்
நிலா.
மனசையும்
சேர்த்து நனைக்கும்
மழை.
பாதங்களைத்
தொட்டு
ஆசிர்வாதம்
வாங்கும்
அலை.
யாதுமாகி
நீ
நின்றாய்
பெண்ணே.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பயணம்


நதியில்
விழுந்த
இலையின்
பயணம் போல்
வாழ்க்கை.

எக்கரை
ஒதுங்குமோ?

வியாழன், 15 ஏப்ரல், 2010

திரை கடலோடியவர்கள்






சொந்த மண்ணைப் பிரிந்து தொலை தூரம்
சென்று இவர்கள் அடைந்தது என்ன?
பணம்.
பணம் மட்டும் தான் மனிதனின் சந்தோஷமா?
ஆம் என்று சொல்பவர்கள் சற்று விலகிவிடுங்கள்.
இவர்கள் இழந்ததை பட்டியலிட்டால்
நீண்டு விடும் சாத்தியமுண்டு.
அதற்கு முன்பாக சொலவதற்கு ஒன்றுண்டு.
எந்த மண்ணின் வீரியம் உறிஞ்சி வளர்ந்தோமோ
அந்த மண்ணிற்கே பூக்களையும், கனிகளையும்
கொடுப்பதுதானே சரி.
அதை விடுங்கள்.
இவர்களின் சுற்றத்தினர்களால் இவர்கள்
உறிஞ்சப்படுவதை இவர்களே அறிவதில்லை.
அறியும் நேரத்தில் எல்லாம் கை மீறி
விடுகிறது.
மற்றொன்று.
இவர்கள் மத்ய வயதைத் தாண்டியதும்
இவர்களுக்குள் சலன வட்டங்கள்.
குழந்தைகள் எந்த சாயலில் வளர்வார்கள்?
?????????????
மண்டையைப் பிறாண்ட ஆரம்பித்து விடுகிறது.
முள் கிரீடம்.
துறக்கமுடியுமா?
அதன் பின் NOSTALGIA.
எவ்விதம் விடுபடுவார்கள்?

புதன், 14 ஏப்ரல், 2010

உரிமை மீறல்


6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும்
இலவச மற்றும் கட்டாய கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமைச்
சட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதை அமுல் படுத்துவதில் 135 வது நாடாக பின் தங்கினாலும்
அரசுக்கு முதலில் நன்றி.
குழந்தைகள் பள்ளிக்குப் போகாததற்குக் முதல் காரணம்
வறுமை. பின் பெற்றோர்களின் அறியாமை.
அதன் பின் குழந்தைத் தொழில்.
இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது ?
எல்லாவற்றையும் அரசாங்கம் பார்க்க வேண்டும்
என்று நாம் சும்மா இருந்து விட முடியாது.
நமக்கும் சில சமூகக் கடமைகள் உண்டு.
ஒவ்வொரு துளியும் சமுத்ரமாய் மாறும்
சாத்தியமுண்டு.
”அகல உழுவதை விட ஆழ உழுவது பயன்”.
ஒவ்வொரு தனி மனித குழுக்கள், மற்றும்
வளமான நிறுவனங்களும் ஒவ்வொருப் பகுதியைத்
தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அங்குள்ளப்
பெற்றோர்களை அடுத்தத் தளத்திற்கு
அழைத்துச் சென்றாலே பாதி பிரச்னைத்
தீர்ந்து விடும். அதற்கு முன்னதாக அவர்களின்
பொருளாதார தரத்தை மேலுயர்த்துவதற்கான
சாத்தியங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும்.
ஆசிரியர்களுக்கு இதில் மிகவும் முக்கிய
பங்குண்டு. அவர்கள் இதை வெறும் சம்பளம்
வாங்கும் வேலையாக மட்டும் பார்க்காமல்
அதையும் தாண்டி ஆக்கப்பூர்வமாகச் செயல் பட
வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஊர் கூடி
தேர் இழுக்கும் விஷயம்.
ஆளுக்கு ஒரு கை கொடுப்போம்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றில் அலையும் சிறகு



புது டெல்லி,
13.04.2010.




ப்ரிய குண்டூஸ்,
ஞாபகமிருக்கிறதா?
நாம் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட நாளை.
ஸ்டீபன் சார் தான் என்னை உனக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் பார்வையிலேயே உன்னை
எனக்குப் பிடிக்கவில்லை.
அலுவலகத்தில் உள்ள எல்லாப்
பெண்களும் உன்னிடம் பேசுவதற்கு
ஆசைப்படுவார்கள்.
நானோ அதற்கு எதிர்.
தினமும் காலை எழுந்ததும்
உன் ஜோக்குக்குச் சிரிக்கக்
கூடாதென மனசுக்குக்
கட்டளையிடுவேன்.
அன்று ஒரு நாள்.
யாரோ சொன்ன செய்தி
என்னைப் புன்னகைக்க வைத்தது.
அப்போது அருகில் இருந்தாய்.
நீ சொன்னது இன்னமும்
என் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
“ ஒரு வாரம் லீவு வேணும்.
இவங்க சிரிச்சா திருப்பதில
மொட்டைப் போடுவதா
ஒரு வேண்டுதல் ”.
அவ்வளவு நாள் அடக்கி வச்சிருந்த
சிரிப்பையும் கொட்டினேன்.
நம் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப்
பத்திரிக்கை நடத்தினோமே.
அதில் ஒரு கவிதை எழுதியிருந்தாய்.

காதலைச் சொல்லும் வழி
வைரமென வைர வியாபாரிகள்
சொல்கிறார்கள்.
என் வைரத்திடம் எப்படி
வைரத்தால் சொல்வது?

யார் அந்த வைரமெனக் கேட்டேன்.
தயங்காமல் சொன்னாய்.
நான்தான் என்று.
அதன் பின் நடந்தவை எல்லாம்
கனவு போல்.
நம் திருமணத்திற்கு என் அப்பாதான்
கொஞ்சம் சங்கடம் கொடுத்தார்.
அவரையும் நீ வசீகரித்தாய்.
நம் இந்துக் குட்டிப் பிறந்த போது
என் விரல் பற்றி அழுதாயே?
அப்புறம் சூர்யாப் பயல்
பிறந்தபோது சிரித்தாய்.
எத்தனை வருஷங்கள் ஆகிப் போயின.
நம் இந்து இப்போது ஜெர்மனியில்.
சூர்யா கனடாவில்.
இருவரையும் பார்த்து
நீண்ட நாளாகி விட்டது.
உன்னிடம் எத்தனை முறைச்
சொல்லியிருக்கிறேன்.
நீ தனியாகச் சாகக்கூடாதென.
என் சொல்லை நீ கேட்கவேயில்லை.
உன் மரணத்திற்குப் பின்
இந்த முதியோர் இல்லத்தில்
தனிமைத் துயரில்
கருகிக் கொண்டிருக்கிறேன்.
ப்ளீஸ்டா.
என்னைக் காப்பாற்று.

மாறாக் காதலுடன்,
உன் ஒல்லிப்பிச்சி.

இழந்த சொர்க்கங்கள்

அம்மாவின் மடி.
விடியல் வெளிச்சம்.
அஸ்தமனச் சூரியன்.
வானவில்.
மழைக் குளியல்.
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
புன்னகை.
எதிர் வீட்டுத் தாத்தாவின்
விசாரிப்பு.
நடு இரவு நடை.
எப்போதும் காதில்
ஒரு சங்கீதம்.
முன்னாள் காதலியின் பார்வை.
சுய நிர்வாணம்.
இழந்தவைகளின்
பட்டியல் இன்னமும்
நீளக்கூடும்.

Most of us miss out on life's big prizes.
The Pulitzer. The Nobel. Oscars. Emmys.
But we are all eligible for life's small
pleasures. Don't fret about getting life's
grand awards. Enjoy its tiny delights.
They are plenty for all of us.

நன்றி ROBIN SHARMA.

தோழர்கள் எல்லாம்
ராபின் ஷர்மாவுக்கு
ஒரு ’ஓ’ போடுங்க.

வெள்ளித்திரை X சின்னத்திரை




Vs.





போன வாரம் படம் பார்க்கத்
தியேட்டருக்குப் போனேன்.
நூறூ ரூபாய் நோட்டை
நீட்டினேன். முறைத்தார்
டிக்கெட் கொடுப்பவர்.
நூற்றைம்பது ரூபாயாம்.
எங்க ஊரில் இந்தத் தொகை
மிக அதிகம். சுற்று முற்றும்
பார்த்தேன். கூட்டமுமில்லை.
விசாரித்ததில் தெரிந்தது.
டிக்கெட் விலையை தியேட்டர்
உரிமையாளரே நிர்ணயம்
செய்து கொள்ளலாமாம்.
அரசு அனுமதி
கொடுத்திருக்கிறதாம்.
பகல் மற்றும் இரவுக்
கொள்ளை.
முன்பெல்லாம்
தியேட்டர் வாசலில்
ஒரு போலிஸ்காரர்
நிற்பார். பிளாக்கில்
டிக்கெட் விற்பதைத்
தடுக்க என்பதை
நினைவில் கொள்க.
உள்ளே போனால்
ஏஸி தியேட்டர் ஆதலால்
ஃபேன் போடமாட்டார்கள்.
ஏஸியும் கூட.
முதுகில் மூட்டைப்பூச்சிக்
கடிக்கும்.
கழிவறை நாறும்.
கொறிக்கக் கொடுக்கும் காசில்
கிராமத்தில் ஒரு
பிளாட் வாங்கிப் போடலாம்.
படத்தைப் பார்க்கும் போது
நல்லாப் பொழுது போகும்.
எந்தெந்தப் படத்திலிருந்து
சீனை உருவியிருக்கிறார்கள்
என்று கணக்குப்
போட்டுக்கொண்டேயிருக்கலாம்.
படம் முடிந்து
வேர்க்க வியர்க்க
வெளியே வந்தால்
எல்லாப் படங்களின்
வட்டத் தகடு.
ரூபாய் இருபது மட்டுமே.
இப்ப நான் என்ன செய்வது?

DROPS



தொட்டிச் செடி
ஞாபகத்தில்
வறளுகிறது
சுற்றுலா.

மரங்களை
இழந்த
பறவைகளுக்கு
எவ்விதம்
சொல்வது
ஆறுதல்?

மின்சாரம்
ஷாக் அடிக்கும்.
மின் கட்டணமுமா?

தூரிகைகளின்
கல்லறையில்
ஃப்ளெக்ஸ் போர்டின்
அஞ்சலி.

திருட்டு
மின்சாரத்தில்
ஒளிர்கிறது
திருவாளர் நேர்மையின்
கட்-அவுட்.

இன்னமும்
கற்றுக்
கொள்ளவேயில்லை
ஆசிரியர்கள்
குழ்ந்தைகளிடம்.

நிலா தரிசனம்.
வாழ்க
மின் தடை.

இப்போதெல்லாம்
மழைக்குக் கூட
ஒதுங்க
முடிவதில்லை
அரசு பள்ளியில்.

தானியங்களைப்
பொறுக்க வந்த
புறாக்கள்
திகைக்கின்றன
வயல்கள்
வீட்டு மனைகளாய்
மாறியதறியாமல்.

ஜனவரி
பிப்ரவரி
மார்ச்சுவரி.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

மழை குறித்த அபிப்ராயங்கள்


சிறு வயதில்
தோழனாய்

இளம் வயதில்
உள்ளங்கவர் கள்ளியாய்

மத்ய வயதில்
நடைபாதைக் குழந்தைகளின்
துயில் கலைக்கும்
ராட்சஷனாய்

முதிய வயதில்
கைப் பிடித்து
அழைத்து போகும்
மரண தேவதையாய்.

மாறிக் கொண்டேதான்
இருக்கிறது
மழை குறித்த
அபிப்ராயங்களும்.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கோடைக்காலக் குற்றங்கள்


கோடை.
வழக்கம் போல் தகிக்கிறது.
’இந்த வருஷம் வெயில் அதிகம்’
வழக்கம் போல் பேசித் திரிகிறோம்.
மூச்சு முட்டும் பாடத்திலிருந்து
குழந்தைகளுக்கு விடுதலை.
பொறுக்குமா நமக்கு?
போதாக்குறைக்கு விளம்பரங்கள் வேறு.
SUMMER CAMP.
புடிச்சுப் போடுங்கடா பசங்களை.
சச்சின் போல கிரிக்கெட் ஆடணும்.
டாம் க்ரூஸ் போல பேசணும்.
அப்படியே ஷாருக்கான் மாதிரியும்.
ஷங்கர் மஹாதேவன் மாதிரிப் பாடணும்.
மைக்கேல் போல MOON WALK போகணும்.
குற்றாளீஸ்வரன் மாதிரி நீஞ்சணும்.
FITTEST CAN SURVIVE ன்னு
அப்பன், ஆத்தாக்களின் கொடுமைக்கு
ஒரு வியாக்கியானம் வேறு.
இந்த சூழலில் கலீல் கிப்ரான் ஞாபகம்
வருவதைத் தடுக்க முடியவில்லை.
குழந்தைகள் உங்களிடமிருந்து
வந்தவர்கள் இல்லை.
உங்களின் வழியாக வந்தவர்கள்.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்.
குழந்தைகளுடன் கும்மாளமிடுவோம்.
தகிக்கும் கோடையும்
குளிரும்
குழந்தைகளின் புன்னகையால்.

சனி, 3 ஏப்ரல், 2010

தேடல்


பதில்களுக்கானத்
தேடல்
வனம் புக விடுகிறது.
சிகரம் தொட
அனுமதிக்கிறது.
சமுத்திரத்தில்
மூழ்கடிக்கிறது.
கேள்விகளின்
அலைக்கழிப்பில்
தேடல் போய்
முடிவது
மேலும்
பல கேள்விகளிடம்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வெய்யிலுக்கு இதமாய்







இவைகள்
எனக்கு
வேண்டா.
உன்
புன்னகையும்
குளிர் முத்தங்களும்
போதும்.